மின் தடையை சரிசெய்ய எவ்வளவு நேரமாகிறது? புதிய சாப்ட்வேர் மூலம் கண்காணிக்கப்படுகிறது: மின்வாரியம் திட்டத்தால் ஊழியர்கள் ‘ஷாக்’

சென்னை: மின்தடையை சரிசெய்வதற்கு ஊழியர்கள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கின்றனர் என்பதை புதிய சாப்ட்வேர் மூலம் மின்வாரியம் கண்காணிக்கிறது. இதனால் மெத்தனமாக செயல்படும் மின் ஊழியர்கள் ‘ஷாக்’ அடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 2.90 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கு தேவையான மின்சாரத்தை சீராக விநியோகம் செய்வதற்காக 1,600க்கும் மேற்பட்ட துணைமின்நிலையங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எப்போதும் சீரான மின்விநியோகம் இருக்காது.

தொடர்ந்து மின்சாரம் பயணிப்பதால் கம்பிகளில் வெப்பம் அதிகரிக்கும். உப்புக்காற்று படிவது போன்றவற்றால் மின்தடை ஏற்படும். மழை, புயல் வீசும் போதும் மின்தடை ஏற்படும். இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் கணினி மின்தடை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை, நுகர்வோர் 1912 எண்ணில், தொடர்பு கொண்டு, மின் தடை குறித்த புகாரை அளிக்கலாம். ஆனால் சில இடங்களில் இந்த எண் பழுது அடைந்து விட்டது; நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் பிசியாக உள்ளது என்ற பதில் மட்டுமே கிடைப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால் நீண்ட நேரத்திற்கு மின்விநியோகம் பாதிக்கப்படும். அப்போது வாரியத்திற்கு வருவாய் இழப்பும், நுகர்வோருக்கும் பாதிப்பு ஏற்படும். இந்நிலையில் மின்தடையை சரிசெய்வதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை புதிய சாப்ட்வேர் மூலம் கண்டறியப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: டெல்லியில் மத்திய மின்சார ஆணையம் செயல்படுகிறது. இது நாடு முழுவதும் நடக்கும் மின்விநியோகத்தை கண்காணித்து வருகிறது. இந்த ஆணையத்திற்கு அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள், மின்தடை போன்ற விபரங்களை அனுப்பி வைத்து வருகின்றனர்.  

இந்த தகவல் ஒவ்வொரு காலாண்டு, மாதம் வாரியாக அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து பணிகளையும் நேரடியாக கண்காணிக்கும் வகையில், புதிய சாப்ட்வேர் ஒன்றை மத்திய மின்சார ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் திட்டமிடப்படாத மின்தடை ஒருஇடத்தில் ஏற்படும் பட்சத்தில், அதை சரிசெய்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம். எத்தனை முறை பழுது ஏற்படுகிறது போன்ற விபரங்களை அதிகாரிகள் பதிவு செய்ய வேண்டும். அப்போது ஊழியர்கள் மின்தடையை சரிசெய்ய நீண்ட நேரம் எடுத்துக்கொண்டால், அவர்களிடம் கேள்வி கேட்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே மின்தடை விரைந்து சரிசெய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனால் மெத்தனமாக செயல்படும் மின்ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மின்தடை ஒருஇடத்தில் ஏற்படும் பட்சத்தில், அதை சரிசெய்வதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம். எத்தனை முறை பழுது ஏற்படுகிறது போன்ற விபரங்களை அதிகாரிகள் பதிவு செய்ய வேண்டும்.

Related Stories: