பத்திரப்பதிவிற்கு முன்னரே மனை உட்பிரிவு செய்யலாம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பத்திரப்பதிவுக்கு முன்னரே உட்பிரிவு பட்டா அங்கீகாரம் செய்யும் முறை அறிமுகம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகள், மனைகள் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க, அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி வீடுகள், மனைகளின் விற்பனை பதிவு முடிந்தவுடன், பட்டா பெயர் மாற்ற நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளது.  பத்திரப்பதிவின் போதே, பட்டா பெயர் மாற்ற கட்டணம் வசூலிக்கப்பட்டு, வருவாய் துறைக்கு அனுப்பப்படுகிறது. சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வரும் விவரங்கள் அடிப்படையில், பட்டா பெயர் மாற்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மனைகளை உட்பிரிவு செய்ய தாமதமாவதால், பட்டா பெயர் மாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

 
Advertising
Advertising

இந்நிலையில், சொத்துகளை வாங்குவோர், பத்திரப்பதிவுக்கு முன், நில அளவை செய்வதில்லை என்பதால், பத்திரத்தில் இருக்கும் அளவுக்கும், பட்டாவில் வரும் அளவும் வேறுபடுகிறது. இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வாக, பத்திரப்பதிவுக்கு  புதிதாக சில கட்டுப்பாடுகளை விதித்து வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது: போலியான ஆவணங்களை நிலம் தொடர்பான பத்திரப்பதிவு செய்வதை தவிர்ப்பதற்காக பத்திரப் பதிவுக்கு முன்னரே பட்டா உட்பிரிவு பரிசீலனை மற்றும் அங்கீகாரம் செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த  நடைமுறையின் கீழ்  நிலங்களை விற்பனை செய்ய விரும்புவோர் வட்ட அலுவலகங்களில் விண்ணப்பித்து தாங்கள் விற்பனை செய்ய உள்ள நிலங்கள் சொத்துகளில் புகைப்படங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் பெற வேண்டும்.

அந்த  விண்ணப்பங்கள் தரப்படும் வட்ட அலுவலகங்களில் உள்ள நில அளவை பணியாளர்கள் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய நில பரிவர்த்தனைக்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட தற்காலிக உட்பிரிவு ஆவணங்கள் இணையவழியில்  சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் நில உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன்பின்னர் நில உரிமையாளர் நில பரிவர்த்தனையை சார்பதிவாளர் அலுவலகம் மூலம் மேற்கொள்ள முடியும். தொடர்ந்து, இணைய வழி பட்டா மாறுதல் தணிக்கை, இணையவழி பட்டா மாறுதல் மற்றும் புல தணிக்கை ஏதுமின்றி ஆவணங்கள் பதிவு செய்யப்படும். இந்த உட்பிரிவு அங்கீகாரம் பெறுவதற்கு கிராமப்பகுதியில் ரெண்டு ஏக்கருக்கு மேல்  இருந்தால் ரு.1000, அதற்குமேல் ஒவ்வொரு ஏக்கருக்கும் தலா ரூ.500ம், நகர்ப்புற பகுதிகளில் ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த பணிகள் 30 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.

  முன்னுரிமை அடிப்படையில் என்றால் கிராமப்புற பகுதியில் 2 ஏக்கருக்கு நகர்ப்புற பகுதியில் ஒரு கிரவுண்ட் ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்பட்டு 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.இந்த நில அளவையின்போது உரிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன்பிறகே ஒப்புதல் அளிக்கப்படும் இந்த ஆவணங்கள் சரிவர இல்லை என்று நில அளவையர் கருதினால் விண்ணப்பங்கள் ரத்து செய்யலாம். அந்த ரத்து செய்யப்பட்ட  விண்ணப்பத்தின் தொடர்பாக பொதுமக்கள் துணை தாசில்தாரிடம் தொடர்பு கொண்டு மேல்முறையீட்டுக்கு செல்லலாம். இந்த நில அளவை பணிகள் நில அளவையர் மற்றும் பயிற்சி பெற்ற நில அளவையர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டம் முன்னோட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும்  ஆலத்தூர் தாலுகாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: