சென்னை மெட்ரோ ரயிலில் திரைப்படம், கேளிக்கை காணொளிகளை பார்க்கும் வசதி அறிமுகம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போர் திரைப்படம், பாடல்கள் உள்ளிட்ட கேளிக்கை காணொளிகளை பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சென்னை மெட்ரோ நிர்வாகம், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் போது பயணிகள் தங்கள் செல்லிடப்பேசிகளில் திரைப்படம், டி.வி. தொடர்களை இலவசமாக பார்க்கும் வகையில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த கவர்ச்சியான திட்டம் குறித்த விளம்பரங்களை ஏற்கனவே மெட்ரோ ரயிலில் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் பொழுதுபோக்குக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ நிர்வாகம் உருவாக்கியுள்ள சுகர்பாக்ஸ் என்ற செயலி மூலமாக காணொளிகளை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் உள்ள வைஃபை வசதியை கொண்டு சுகர்பாக்ஸ் செயலில் பதிவிடப்பட்ட காணொளிகளை ரசிக்க முடியும் என மெட்ரோ நிர்வாகம் கூறியிருக்கிறது.

தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உள்ள காணொளிகள் சுகர்பாக்ஸ் செயலியில் பதிவிடப்பட்டிருக்கின்றன. இந்த காணொளிகளை தரவிறக்கம்  செய்யும் வசதியும், சுகர்பாக்ஸ் செயலியில் ஏற்படத்தப்பட்டிருக்கிறது. சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் சுகர்பாக்ஸ் செயலியை பயன்படுத்த இயலும் என்றும், விரைவில் இந்த திட்டம் அனைத்து விதமான வழித்தடங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, பயணத்தின் போது பயணிகளை மகிழ்விக்கவும், பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: