அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் : தமிழக அரசு திடீர் உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்கள் கண்டிப்பாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டும், இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள், துணை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள உயர் அதிகாரிகள், டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:

அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் பலர் அடையாள அட்டை அணிவதில்லை என்று புகார் வந்துள்ளது. இது தவறான நடவடிக்கையாகும். அதனால், அந்தந்த துறை தலைவர்கள் தங்கள் துறையின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள் பணியின்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிவதை உறுதி செய்ய வேண்டும். அப்படி அணியாதவர்கள் மீது துறை தலைவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: