திமுக முன்னாள் அமைச்சரும் திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.பி.பி.சாமி காலமானார் : உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது

சென்னை: திமுக முன்னாள் அமைச்சரும் திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த கே.பி.பி.சாமி, சென்னை திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை மறைவு எய்தினார். கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டு மீன்வளத்துறை அமைச்சர் ஆனார்.

Advertising
Advertising

2006-2011 வரை தமிழக மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த அவர், திமுகவின் மாநில மீனவ அணி செயலாளராக இருந்து வந்தார்.அதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றவர் கே.பி.பி.சாமி.மறைந்த கே.பி.பி.சாமியின் உடல் அஞ்சலிக்காக திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

திமுகவின் மூத்த உறுப்பினரும் முன்னாள்  கவுன்சிலருமான பரசுராமன் என்பவரின் மகன் கே.பி.பி.சாமி, திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர். மறைந்த கே.பி.பிசாமிக்கு உமா என்ற மனைவியும் இனியவன்,பரசுபிரபாகரன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். முன்னாள் கவுன்சிலரான அவரது மனைவி உமா, மூத்த மகன் இனியவன் ஆகிய இருவரும் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார்கள்.அவரது மகள் திருமணமாகி தனது கணவரோடு ஆஸ்திரேலியாவில் குடியிருந்து வருகிறார். இவரது குடும்பம் திமுகவில் பல்வேறு பொறுப்புகளிலிருந்து இருந்துள்ளனர். மீனவர் பகுதியில்  திமுகவை வளர்க்க கே.பி.பி.சாமி முக்கிய பங்காற்றியவர். மறைந்த கலைஞர் கருணாநிதியிடம்  மிகவும் நெருக்கமாக இருந்தவர்.

Related Stories: