கேரளாவில் சயனைடு மூலம் 6 கொலைகளை செய்த சீரியல் கில்லர் ஜோலி சிறையில் தற்கொலை முயற்சி..!

கோழிக்கோடு: கேரளாவில் சயனைடு மூலம் 6 கொலைகளை செய்த சீரியல் கில்லர் ஜோலி, கோழிக்கோடு சிறையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியைச் சேர்ந்தவர் ராய் தாமஸ். இவரது மனைவி ஜோலி. கடந்த 2002-2016ம் காலக்கட்டத்தில் ஜோலியின் கணவர் ராய்தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உள்பட 6 பேர் மர்மமாக இறந்தனர். பின்னர் சொத்துக்கள் ஜோலியின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது. இதற்கிடையே, ராய்தாமசின் அண்ணன் ரோஜோ, தந்தையின் உயில் மற்றும் குடும்பத்தினர் 6 பேரின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து 6 பேர் உடல்களையும் போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

விசாரணையில் 6 பேரையும் ஜோலி, சயனைடு கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஜோலியை கைது செய்த போலீசார், அவரை கோழிக்கோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். அவருக்கு சயனைடு வாங்கி கொடுத்த உறவினர் மேத்யூ, நகை தொழிலாளி பிரஜூகுமாரும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில், மேலும், சிலரையும் கொல்ல ஜோலி திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது. இந்நிலையில், சயனைடு ஜோலி இன்று சிறையில் தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட சிறை அதிகாரிகள் அவரை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கிடையில், சிறையின் உள்ளே கூர்மையான பொருள் எவ்வாறு வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: