கோயம்பேடு 100 அடி சாலையை ஆக்கிரமித்து கட்டிய வீடு, கடைகள் இடித்து அகற்றம்: நெடுஞ்சாலை அதிகாரிகள் அதிரடி

அண்ணாநகர்:கோயம்பேடு 100 அடி சாலையில் மேம்பால பணிக்கு இடையூறாக இருந்த 20க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.   சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த 2011-ம் ஆண்டு, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே சாலையின் நடுவில் 93.5 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆனால் அங்கு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏற்பட்ட இடையூறுகளால் பாலப்பணிகள் மந்தகதியில் உள்ளன. இதனால் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதையடுத்து மேம்பாலத்தை ஒட்டிய சாலையோர பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள், ஓட்டல்கள் மற்றும் கடைகளை காலி செய்யும்படி மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கினர்.

எனினும் அங்கு குடியிருந்தவர்கள் காலி செய்ய மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் ஒருசிலர் தாங்களாகவே முன்வந்து கடைகளை காலி செய்தனர்.

இந்நிலையில் கோயம்பேடு 100 அடி சாலையை ஒட்டி ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டிடங்களை இடிக்க நேற்று காலை 10.30 மணியளவில் பொக்லைன் இயந்திரங்களுடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜெயக்குமார், முரளி, அன்பரசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வந்தனர்.

அங்கு அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மேம்பாலத்தை ஒட்டி சாலை வளைவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். மேலும், அங்கு ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த ஒருசிலர், தாங்கள் கடை மற்றும் வீடுகளை காலிசெய்ய இன்னும் ஒரு மாதகாலம் அவகாசம் வழங்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். எனினும், அங்கு மேம்பாலப் பணிகளை விரைவில் துவங்க, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும்படி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories: