2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மருத்துவகல்லூரி மாணவர் ஒருவர் கைது: சிபிசிஐடி போலீஸ் விசாரனை

சென்னை: 2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மருத்துவகல்லூரி மாணவர் தனுஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வந்த நிலையில் தனுஷை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தை கலக்கி வரும் நீட் தேர்வு முறைகேடு, வடமாநிலங்களில் நடைபெற்றுள்ளதும், சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உதித் சூர்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் மாணவி உள்பட 3 மாணவர்கள் மற்றும் அவர்களது 3 பெற்றோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு டாக்டர், ஒரு மாணவர் மற்றும் புரோக்கரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் வெங்கடேசன் இவரது மகன் உதித் சூர்யா. இவர் 2019-20ம் ஆண்டு ‘நீட்’ தேர்வின் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் உதித்சூர்யா படிக்கும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு இ.மெயில் மூலம் புகார் ஒன்று வந்தது.

அதில், உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வு விண்ணப்பத்தில் உள்ள மாணவரின் புகைப்படத்திற்கும் தற்போது தேனி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் உதித்சூர்யாவின் புகைப்படத்திற்கும் வித்தியாசங்கள் உள்ளன என்று அதில் கூறப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் புகாரின் பேரில் தேனி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின்பேரில் ஐஜி சங்கர் மேற்பார்வையில் எஸ்பி விஜயகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பெரிய அளவில் ‘நெட்ஒர்க்’ அமைத்து பலர் முறைகேடாக நீட் தேர்வு எழுதியது தெரியவந்தது. அதையடுத்து மாணவன் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் 10 பேரின் புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில் அவர்களின் பெயர் விவரங்களை அறிவதற்காக சிபிசிஐடி போலீசார் ஆதார் இணையதளத்தை அணுகினர். நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து யார் யாரெல்லாம் தேர்வு எழுதினார்களோ அவர்களின் புகைப்படத்தையும், கைரேகையையும் வெளியிட்டனர். குறிப்பாக இவர்கள் அனைவருமே வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் இது தொடர்பான அறிவிப்பை அந்தெந்த காவல்துறைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இந்த 10 பேருமே மருத்துவ மாணவர்களாக இருப்பார்கள் அல்லது இளநிலை, முதுநிலை படித்த மாணவர்களாக இருப்பார்கள் என்பதன் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் இருக்கும் மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு இந்த புகைப்படங்கள் மற்றும் கைரேகையை அனுப்பி இதுபோன்ற மாணவர்கள் படித்து வருகிறார்களா? என்றும் சிபிசிஐடி போலீசார் கேட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தேசிய மருத்துவ குழுவின் நிறுவனத்திடமும் இது தொடர்பாக கடிதம் எழுதியிருப்பதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த 10 மாணவர்களை பிடிப்பதற்கு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேசிய மற்றும் மாநில குற்ற ஆவண காப்பகத்திலும் சோதனை மேற்கொண்ட போதும் கூட இதுபோன்ற நபர்கள் இல்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. எனவே தான் ஆதார் அட்டையை தயாரிக்கும் உதய் எனப்படும் அந்த நிறுவனத்திடம் தற்போது சிபிசிஐடி உதவியை நாடியுள்ளது. அவர்களிடம் 10 பேரின் புகைப்படம் மற்றும் கைரேகையை அளித்து இதுபோன்ற நபர்கள் இந்தியாவில் எங்கேயும் இருக்கிறார்களா? என கேட்டு கொண்டுள்ளனர். விரைவில் இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்படும் என்றும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை எம்.பி.பி.எஸ் நீட் தேர்வில் மட்டும் நடைபெற்ற முறைகேடானது முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்விலும் நடைபெற்றிருக்கின்றதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது தொடர்பாகவும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடக்கும் பொதுத் தேர்வுகளில் பல்வேறு மாற்றங்களை சிபிஎஸ்இ கொண்டு வந்துள்ளது. சிபிஎஸ்இ என்னும் மத்திய பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் இந்த ஆண்டு 10, 12ம் வகுப்புகளில் படிக்கும் 30 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். புது நடைமுறையாக இந்த ஆண்டு முதல் பொதுப் பாடப்பிரிவுகளான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கின. சிபிஎஸ்இ தேர்வுகளில் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு பிரச்னை எழுவது வழக்கம், கேள்விகள் முன்கூட்டியே வெளியாவது, விடைத்தாள் திருத்துவதில் பிரச்னைகள் என்பன வழக்கமாக இருந்தது. அது போன்ற பிரச்னைகள் எழாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள், கேள்வித்தாளில் சில மாற்றங்கள் என்று பல்வேறு மாற்றங்களை சிபிஎஸ்இ செய்துள்ளது. விடைத்தாளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

கேள்வித்தாளை பொறுத்தவரையில் புது மாற்றமாக கடந்த சனிக்கிழமை அன்று வழங்கப்பட்ட கேள்வித்தாளில் வலப்பக்கம் ஆங்கிலத்திலும், இடப்பக்கத்தில் இந்தியிலும் கேள்விகள் இடம் பெற்று இருந்தன. விடைத்தாளை பொறுத்தவரையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, முதல் பக்கத்தில் ஓஎம்ஆர் ஷீட்கள் இணைக்கப்பட்டு வழங்கப்பட்டன. மாணவர்களின் பதிவு எண்கள் 7 டிஜிட்டுக்கு பதிலாக 8 டிஜிட்டில் வழங்கப்பட்டன. அத்துடன் அந்த எண்களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதும் விடைத்தாளின் மறுபக்கத்தில் அச்சிட்டு வழங்கப்பட்டன. அனைத்து தேர்வு அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தேர்வுக் கண்காணிப்பாளர்கள் நேரடியாகவே தேர்வு மையங்களை பார்வையிட்டனர். இதையடுத்து பிப்ரவரி 20ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க சிபிஎஸ்இ உத்தரவிட்டது. தற்போது 2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மருத்துவகல்லூரி மாணவர் தனுஷ் என்பவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: