ராயபுரம் ரயில் நிலையத்தில் மந்தகதியில் நடக்கும் தண்டவாள பணிகள்

தண்டையார்பேட்டை: டெல்லி, கொல்கத்தா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கும்மிடிப்பூண்டி வந்து அங்கிருந்து ராயபுரம், கடற்கரை ரயில் நிலையம் வழியாக எழும்பூர் ரயில் நிலையம் செல்கிறது. இதற்காக ரயில் பாதை ஒன்று மட்டும் இருப்பதால் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், ஆங்காங்கே ரயில் நிலையங்களில் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்கள் மாறிமாறி நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வாக ரயில்வே நிர்வாகம் கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் மின்சார ரயில்கள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடற்கரை ரயில் நிலையம் வழியாக செல்வதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

கடந்த சில மாதங்களாக இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் தமிழகத்தில் பழமை வாய்ந்த ரயில் நிலையமாக உள்ள ராயபுரம் ரயில் நிலையத்தில் இந்த மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணி மந்த கதியில் நடந்து வருகிறது. இதற்காக ராயபுரம் மேம்பாலத்தின் தூண்கள் மாற்றி அமைக்கப்பட்டு அந்த பணியும் நடந்து முடிந்தது. இருந்தபோதும் ராயபுரம் ரயில் நிலையத்தில் இதற்கான நடைமேடை அமைக்கும் பணியும், மேற்கூரையும் அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணியை ரயில்வே அமைச்சகமும், ரயில்வே துறையும் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

Related Stories: