கொளத்தூர் தொகுதியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கொளத்தூர் தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகை மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்தார். மேலும், 69வது வார்டு திக்காகுளம் பகுதியில் உள்ள சலவை கூடத்தில் புதிய தண்ணீர் தொட்டியுடன் கூடிய சலவை மேடை, தொழிலாளர்கள் ஓய்வுவெடுக்கும் அறைகளுடன் கூடிய நவீன சலவைகூட கட்டுமான பணி ஆகியவற்றை மு.க.ஸ்டாலின், அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதற்காக, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 53 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதே வார்டில் உள்ள சின்னகுழந்தை மெயின் தெரு மடுமா நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்டார். திருவிக நகர் 68வது வார்டில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி, மாநகராட்சி நிதி 10 லட்சம் மதிப்பில் திருவிக நகர் பல்லவன் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை மேம்படுத்தும் பணி ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.

64வது வார்டு தெற்கு மாடவீதியில் சேகர் என்பவரது குடிசை எரிந்து சேதமானது. இதில் பாதிக்கப்பட்ட சேகரின் குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 65வது வார்டு கணேஷ்நகர் பகுதியில் துணை மின் நிலைய பணி மற்றும் 67வது வார்டு ஜி.கே.எம். காலனி 24வது தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் குளம் மேம்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, புத்தகப்பை, வாட்டர் பாட்டில், நோட்டு-புத்தகம், ஜாமன்ட்ரி பாக்ஸ் போன்ற பொருட்களை வழங்கினார். 4 மாணவர்களுக்கு மடிக்கணினி, 3 பேருக்கு திருமண உதவித்தொகை, 21 பேருக்கு தையல் இயந்திரம், 15 பேருக்கு மருத்துவ உதவித்தொகை, 5 பேருக்கு நான்கு சக்கர தள்ளுவண்டி, 5 பேருக்கு மீன்பாடி வண்டி மற்றும் மூன்று சக்கர சைக்கிள், மூக்கு கண்ணாடி ஆகியவற்றையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில், கலாநிதி வீராசாமி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு, தாயகம் கவி, ரங்கநாதன், பகுதி செயலாளர்கள் நாகராஜ், ஐசிஎப் முரளி மற்றும் தேவஜவகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

விபத்தில் சிக்கியவரின் ரத்தத்தை துடைத்த ஸ்டாலின்

தொகுதியில் ஆய்வு பணிகளை முடித்து விட்டு மாதவரம் நெடுஞ்சாலை வழியாக மு.க.ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் பைக் மோதி ஓய்வு பெற்ற பெரம்பூரை சேர்ந்த ஐசிஎப் ஊழியர் சேகர் (62) ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை பார்த்ததும், காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய மு.க.ஸ்டாலின், தனது கைக்குட்டையால், சேகரின் ரத்தத்தை துடைத்தார். பின்னர், அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஜீப்பில் அவரை ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது அங்கிருந்த பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: