சோனியா காந்திக்கு அழைப்பு இல்லை: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு குடியுரசுத் தலைவர் அளிக்கும் இரவு விருந்தை புறக்கணித்தார் மன்மோகன் சிங்

டெல்லி: முதல்முறையாக இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமானநிலையத்தில் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பை  ஆரத்தழுவி வரவேற்றார். இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்பையும், மெலானியாவையும் ஆசிரமத்துக்குள் அழைத்துச் சென்ற பிரதமர் மோடி, மாகாத்மா காந்தியடிகள் வாழ்ந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். அடுத்தப்படியாக,  அகமதாபாத் காந்தி நகரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து, ஆக்ரா விமான நிலையம் வந்த டொனால்ட் டிரம்ப், மனைவி மெலனியா, மகள் இவாங்கா மற்றும் மருமகனுடன் தாஜ்மகாலை 1 மணி நேரமாக பார்வையிட்டார். அத்துடன் தாஜ்மகாலுக்கு முன்பாக மனைவி மெலனியாவுடன்  நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் ட்ரம்ப், டெல்லி புறப்பட்டார்.

இதற்கிடையே, நாளை (பிப். 25) ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இரவு உணவு விருந்து அளிக்கிறார். இதற்காக, 95 மிக முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முன்னாள் பிரதமர்  மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

வழக்கமாக வெளிநாட்டு தலைவர்கள் இந்திய வரும்போது, எதிர்க்கட்சி தலைவர்களை அழைப்பது வழக்கம். ஆனால், இந்த முறை எவ்வித அழைப்பும் காங்கிரஸ் தலைவருக்கு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஜனாதிபதி அளிக்கும்  இரவு விருந்தில் கலந்து கொள்ள, ஜனாதிபதி அலுவலகம் மூலம் அழைக்கப்பட்டவர்களின் பட்டியலில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு குடியுரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளிக்கும் இரவு விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த  தலைவர் சோனியா காந்திக்கு அரசு அழைப்புக் கொடுக்காததால் மன்மோகன் சிங் விருந்தை புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதைபோல், மாநிலங்களவை எதிர்க்சட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் மக்களவை காங்கிரஸ்  தலைவர் ரஞ்சன் சவுத்ரியும் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.  

Related Stories: