முதன்முறையாக இந்திய மண்ணில் கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! : அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

அகமதாபாத்: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்தடைந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேர்டு குஷ்னர் மற்றும் அமெரிக்க உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட பிரதிநிதிகள் ஆகியோரும் தனி விமானத்தில் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வர‌வேற்பு அளிக்கப்பட்டது. அகமதாபாத்தில் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு குஜராத் பாரம்பரிய முறைப்படி சங்கொலி முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.மேளதாளங்கள் முழங்க ட்ரம்புக்கு குஜராத் பாரம்பரிய கலைஞர்கள் வரவேற்பு அளித்தனர்.அகமதாபாத் விமானநிலையம் வந்தடைந்த அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி.

இதைத் தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக காரில் சபர்மதி ஆசிரமம் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். டிரம்ப் உடன் அவரது மனைவி மெலனியாவும், மகள் இவாங்காவும் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர்.22 கி.மீ. சாலையின் இருபுறமும் 40 இடங்களில் டிரம்பை வரவேற்க கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரை டிரம்பை வரவேற்க அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.அதிபர் ட்ரம்ப் காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள், அதிகாரிகள் கார்கள் அணிவகுத்து சென்றனர். சாலையின் இரு புறமும் அமெரிக்கா மற்றும் இந்திய தேசிய கொடிகளை அசைத்தபடி ஆயிரக்கணக்கான மக்கள் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.சாலையின் இருபுறமும் கூடியுள்ள மக்களின் வரவேற்பை ஏற்கும் வகையில் மெதுவாக அதிபர் ட்ரம்பின் வாகன அணிவரிசை சென்றது.டிரம்பை வரவேற்க சாலையின் இருபுறமும் கூடியுள்ள மக்கள் அதிபர் ட்ரம்பை செல்போனில் படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.

Related Stories: