மெட்ரோ ரயில் நிலையத்தில் டைல்ஸ் விழுந்து விபத்து

சென்னை,: சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் 70 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். விமான நிலையம், சென்ட்ரல், நந்தனம், எழும்பூர், கோயம்பேடு ஆகிய நிலையங்களில் நாள் தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு வருடமாகவே மெட்ரோ ரயில் நிலையங்களின் சுவரில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் திடீரென கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து அலங்கார கண்ணாடிகளும் உடைந்து கீழே விழுந்து வருகிறது. குறிப்பாக, ஷெனாய் நகர், அண்ணாநகர் டவர், நேரு பூங்கா, சென்ட்ரல் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த பிரச்னை தொடர்ந்தவாறு உள்ளது.

இந்தநிலையில், நேற்று பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்கும் இடத்தின் சுவரில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் கல் திடீரென பெயர்ந்து கீழே விழுந்தது. அப்போது, அருகில் இருந்த டிக்கெட் கொடுக்கும் ஊழியர் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்தார். இந்த சம்பவத்தில் ஊழியர் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இதையடுத்து, சம்பவம் குறித்து ஊழியர்கள் தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். டைல்ஸ் கல் கீழே விழுந்தபோது, அருகில் இருந்த கண்ணாடியில் பட்டதால் கண்ணாடியும் உடையும் நிலையில் உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாகவே மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள டைல்ஸ் கற்கள் கீழே விழுந்தவாறு உள்ளன. மிகப்பெரிய விபத்து நடப்பதற்கு முன்பாக நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: