மூணாறில் கடும் உறைபனி: தேயிலை செடிகள் கருகின

மூணாறு: மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இரவு நேரங்களில் உறைபனி வாட்டுவதால், தேயிலைச்செடிகள் கருகுகின்றன. இதனால், எஸ்டேட் உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் ‘தென்னகத்து காஷ்மீர்’ என மூணாறு அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் தற்போது பகல் நேரத்தில் வெயில் அதிகமாக இருந்தாலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் உறைபனி ஏற்படுகிறது. சாலையோர புல்தரைகளில் பனி படர்ந்து மூடிக்கிடப்பதை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.

மூணாறு மற்றும் லட்சுமி எஸ்டேட், சிவன்மலை பகுதிகளில் குளிரின் அளவு மைனஸ் 1 டிகிரியாகவும், செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் மைனஸ் பூஜ்ஜியமாக இருந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக எஸ்டேட்களில் தேயிலைச் செடிகள் கருகத் தொடங்கியுள்ளன. இதனால், உரிமையாளர்கள் வேதனையில் உள்ளனர். இந்நிலையில், மூணாறில் காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் 28 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: