ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டுக்கு முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க அதிகாரம் இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் முன்ஜாமீன் கோரி, திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியது. இதேபோல ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமும் முன் ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்ததால், தன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தரன் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் என்பது, அமர்வு நீதிமன்றமாக கருதப்படுவதால் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் அய்யப்பராஜ், முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க அமர்வு நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது என்று  வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: சிறப்பு நீதிமன்றத்திற்கு ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க அதிகாரம் வழங்கப்படவில்லை. எனவே, ஸ்ரீதரனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மனுதாரர் அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக முன்ஜாமீன் மனுதாக்கல் செய்ய அனுமதி தரப்படுகிறது. இந்த உத்தரவை உயர் நீதிமன்ற பதிவாளர் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று, அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும்  சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: