பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடின்றி கைவிரிப்பால் தடம்புரளும் தமிழக ரயில்வே திட்டங்கள்

* அகல ரயில்பாதை பணிகளும் அரைகுறை

* தனியார்மயத்தால் பயணிகள் கடும் அவதி

பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த முக்கிய ரயில்வே திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஏற்கனவே துவங்கிய அகல ரயில்பாதை பணிகளும் அரைகுறையாகவே உள்ளன. ரயில்வேயின் பெரும்பாலான சேவைகளை தனியார்மயமாக்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மத்திய அரசு நேரடியாக நிர்வகிக்கும் மிகப்பெரிய பொது, போக்குவரத்து நிறுவனமாக  ரயில்வே வாரியம் உள்ளது. மக்கள் சேவையை மட்டுமே முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்தது. ‘ஏழை மக்களின் சொர்க்க ரதம்’ என்றே ரயிலை குறிப்பிடுவார்கள். குறைந்த கட்டணம் முதல் அதிகபட்ச கட்டணம் வரை உள்ளதால், அவரவர் தங்களது வசதிக்கேற்ற வகையில், ரயிலில் பயணம் செய்து வந்தனர். படுக்கை வசதி, சோர்வு தெரியாதது, பாத்ரூம் வசதி, நேரடி உணவு சேவை என இரவில் பயணிப்போர், ஒரு வீட்டில் கிடைக்கும் வசதிகளுடன் ரயிலில் பயணம் செய்தனர். ஆனால், ரயில்கள் மற்றும் ஒரு சில சேவைகளை தனியார்மயமாக்கியது உள்ளிட்ட மத்திய அரசின் சில அதிரடி நடவடிக்கைகளால் சேவை மனப்பான்மை மங்கி, வியாபார நோக்கமே பிரதானமாக மாறி விட்டது. லாப நோக்கத்தையே குறிக்கோளாக கொண்டுள்ள தனியாரிடம், ரயில் சேவையை தாரை வார்ப்பது உள்ளிட்ட செயல்பாடுகள், ரயில் பயணத்தை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ஏழை மக்களை துயரமடைய வைத்துள்ளது. இதற்கிடையே ரயில்வே திட்டங்களை அறிமுகப்படுத்துவதிலும், சேவையை விரிவு படுத்துவதிலும் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதியை ஒதுக்குவதிலும், மத்திய அரசு மாற்றாந்தாய் கொள்கையை கையாள்கிறது. ‘யானைப்பசிக்கு சோளப்பொரி...’:  ரயில்வே திட்டங்களில், தமிழகம் புறக்கணிக்கப்படுவதை பல்வேறு அரசியல் கட்சியினர், தொழில் சார்ந்த அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தனியார் அமைப்புகள்  பலமுறை சுட்டிக்காட்டியும், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, ரயில்வே வாரியம் இதைக் கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மத்திய ரயில்வே பட்ஜெட்டில், தெற்கு ரயில்வேக்கு பல்வேறு திட்டங்களுக்கு ₹4,057 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, சொற்ப அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, சென்னை  மாமல்லபுரம்  கடலூர் (179 கி.மீ), திண்டிவனம்  செஞ்சி  திருவண்ணாமலை (70 கி.மீ) உள்ளிட்ட 10 தமிழக ரயில் திட்டங்களுக்கு, வெறும் 10 ஆயிரம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனியாருக்கு தாரை வார்ப்பு: ரயில்வே திட்டங்களில், சென்னை  மாமல்லபுரம்  கடலூர் போர்ட் திட்டம், திண்டிவனம்  செஞ்சி  திருவண்ணாமலை வழித்தட திட்டம் மற்றும் அத்திப்பட்டு  புத்தூர், ஈரோடு  பழநி, மொரப்பூர்  தர்மபுரி, கூடுவாஞ்சேரி  பெரும்புதூர்  இருங்காட்டுகோட்டை ஆகிய திட்டங்கள் குறித்து, பட்ஜெட்டில் அறிவிப்பு எதுவுமில்லை. மேலும், தெற்கு ரயில்வேயில் உள்ள 11 ரயில்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, இந்த ரயில்களுக்கான கட்டணத்தை அவர்களை நிர்ணயித்துக்கொள்ள அனுமதி அளிப்பது உள்ளிட்ட அறிவிப்புகள் பயணிகளை வெகுவாக பாதிக்க வைக்கும்.இழு....வையான திட்டங்கள்... இது ஒருபுறமிருக்க, மதுரை   போடி அகல ரயில் பாதை திட்டம் ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் தற்போதுதான், மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரை பணிகள் முடிந்துள்ளது. உசிலம்பட்டியிலிருந்து போடி வரையிலான பணிகள் முடிந்து, மதுரை  போடி அகல ரயில்பாதை திட்டம் முடிய இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்ற நிலைதான் உள்ளது. மேலும், சென்னையிலிருந்து கன்னியாகுமரி  வரை இரட்டை ரயில்பாதை திட்டம் கடந்த 1998ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 22  ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போதுதான் இந்த இரட்டை ரயில் பாதை மதுரையை  எட்டிப்பார்த்துள்ளது. இத்திட்டம் கன்னியாகுமரி வரை செல்ல இன்னும் எத்தனை ஆண்டுகள்ஆகுமோ என்ற நிலை இருக்கிறது.

‘ஷாக்’ தரும் மின்சாரம்:  இதேபோல் மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வரை மின்சார ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, சமீபத்தில் முதல் கட்டமாக மதுரையிலிருந்து  மானாமதுரை வரை மின் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் குறித்து தெளிவான அறிவிப்பு இல்லாதது, பெருத்த ஏமாற்றமாக உள்ளது.விவசாயிகளுக்கு சிக்கல்? போதிய நிதியை ஒதுக்கீடு செய்து, பணிகளை முடுக்கி விடாததால், தமிழகத்தில், புதிய ரயில்பாதை உள்ளிட்ட  பல்ேவறு ரயில் திட்டப்பணிகள் பெரும் தொய்வுக்கு ஆளாகியுள்ளது. மத்திய அரசு, நடப்பாண்டில் 150 ரயில்களை தனியாருக்கு தாரைவார்க்க முடிவு செய்துள்ளது. இதில் 11 ரயில்கள் தெற்கு ரயில்வேயில் உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு சலுகை கட்டணம் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியே.

3 லட்சம் காலியிடங்கள்...  நாடாளுமன்ற நிலைக்குழுவில் ரயில்வேயில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. காலியிடங்களை நிரப்ப, பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. ஊழியர்களும், அதிகாரிகளும் தங்களை மாற்றிக்கொண்டு ரயில்வே துறையை பல்வேறு கட்ட மாற்றத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். ஆனால், மத்திய அரசின் முதலீடு குறைந்ததால், உள்கட்டமைப்பில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், ரயில்வே துறை தனித்தன்மையை இழந்து வருகிறது. எனவே உடனடியாக, தமிழக ரயில்வேக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, சாதாரணமானவர்களும் பயணிக்கிற இந்த போக்குவரத்து துறைக்கு உயிரூட்டுவது காலத்தின் கட்டாயம்.

தமிழக ரயில்வே பணியிடங்களில், 75 சதவீதம் பேர் மற்ற மாநிலத்தவர்களே உள்ளனர். இதனால் தமிழக பட்டதாரி இளைஞர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தெற்கு ரயில்வே வேலைவாய்ப்புகளில் 90 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

10 திட்டத்துக்கு தலா ஆயிரம் (?!?) நிதி

தமிழகத்தில் சென்னை  மாமல்லபுரம்  கடலூர் (179 கி.மீ), திண்டிவனம்  செஞ்சி  திருவண்ணாமலை (70 கி.மீ), அத்திப்பட்டு  புத்தூர் (88 கி.மீ), ஈரோடு  பழநி (91 கி.மீ), பெரும்புதூர்  இருங்காட்டுக்கோட்டை  கூடுவாஞ்சேரி (60 கி.மீ), மதுரை  அருப்புக்கோட்டை  தூத்துக்குடி, மொரப்பூர்  தருமபுரி உள்ளிட்ட 10 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதேபோல், ராமேஸ்வரம்  தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்துக்கும் கடந்த ஆண்டில் ₹49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு வெறும் ₹2 கோடியே 70 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பணியும் முடங்கும் நிலை உருவாகும்.

வருமானம் வராத வழித்தடங்களில் ரயில்

சமூக ஆர்வலர் கணேசன்; ரயில் பாதை பராமரிப்பு என்ற பெயரில், ரயில் போக்குவரத்தில் அடிக்கடி மாற்றம் செய்வது, ரயில் போக்குவரத்தை ரத்து செய்வது, சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் கட்டணத்தை அதிகப்படுத்தி இயக்குவது உள்ளிட்ட மக்களை வெறுப்பேற்றும், செயல்பாடுகளை தெற்கு ரயில்வே தவிர்க்க வேண்டும். மேலும், பயணிகள் விரும்பாத வழித்தடங்களில் ரயில்களை இயக்குவது, வருமானம் இல்லை என்று தெரிந்ததும் அந்த வழித்தட ரயில்களை ரத்து செய்வது போன்ற செயல்கள் தொடர்கிறது. இதை தவிர்க்க வேண்டும். சமீபத்தில், நெல்லை  சென்னை (தாம்பரம்) வழித்தடத்தில் சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கட்டணம் அதிகம் என்பதால். இந்த ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து, இந்தசிறப்பு கட்டண ரயில், ரத்து செய்து அறிவிக்கப்பட்டது. எனவே சிறப்பு ரயில்களுக்கான வழித்தடங்களை தேர்வு செய்வதில்,அனுபவமும், கவனமும் தேவை.

‘தமிழகத்தை வஞ்சிக்கிறார் மோடி’

விருதுநகர் காங். எம்.பி. மாணிக்கம் தாகூர்: ரயில்வே திட்டங்களில் தமிழகத்தை மோடி அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது. திருமணத்திற்கு மொய் எழுதுவது போல், ஓட்டலில் பணிபுரியும் சப்ளையர் வாங்கும் ஊதியத்தை தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதியாக ஒதுக்கி உள்ளது. யானைப்பசிக்கு சோளப்பொறி கொடுத்தது போல, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, போதாத  தொகையை, நிதியாக மோடி அரசு ஒதுக்கி உள்ளது. போதிய நிதி ஒதுக்காததால், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சில திட்டங்கள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ரயில்வே திட்டங்களில் தமிழகத்தை புறக்கணித்து, வஞ்சித்து வரும், பாஜ அரசு, தமிழக மக்களுக்கு விரைவில் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

மதுரைக்கு வருமா மெட்ரோ?

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன்: கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 2வது பெரிய மாநகராட்சியான மதுரையில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இங்கு  மெட்ரோ ரயில் குறித்து அறிவிக்கப்படவில்லை. மதுரைக்கு மெட்ரோ ரயில் வந்தால், பல்வேறு காரணங்களுக்காக மதுரைக்கு வந்து செல்லும் தென்மாவட்ட மக்கள் பெரிதும் பயன்பெறுவர். இதேபோல், வருமானம் வரக்கூடிய வழித்தடங்களை கண்டறிந்து, அந்த வழித்தடங்களில் புதிய ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முன்வர வேண்டும். தமிழக ரயில்வேயில் உள்ள வேலை வாய்ப்புக்களில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.

Related Stories: