இந்திய விமானத்தை அனுமதிக்க சீன திட்டமிட்டு கால தாமதம் : வூகானில் இருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிப்பு

டெல்லி : சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதன் மைய புள்ளியான வூகானில் இருந்து மேலும் 100 இந்தியர்களை அழைத்து வரும் விமானம், சீனா செல்வதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று செல்வதாக இருந்த ஏர் இந்தியா விமானத்துக்கு சீனா அரசு இன்னும் அனுமதி வழங்காததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் மோசமான பாதிப்பை எட்டி இருக்கும் சீனாவுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மருந்துகளை ஏற்றி செல்லும் விமானம் திரும்பி வரும் போது, அதில் இந்தியர்களை அழைத்து வர வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. வூகான் நகரத்தில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விரும்பினால் அவர்கள் அங்குள்ள தூதரகத்தை அணுகும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவில் இருந்து 2 சிறப்பு விமானங்களில் 647 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் சி -17 குளோப்மாஸ்டர் விமானப்படை விமானம் நேற்று சீனா செல்வதாக இருந்தது. சீனாவில் நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு அங்கு உள்ள இந்தியர்களை மீட்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விமானத்திற்கு அனுமதி வழங்க சீன அரசு தொடர்ந்து கால தாழ்த்தி வருகிறது. இதனால் நாடு திரும்ப காத்திருக்கும் இந்தியர்கள் தொடர்ந்து தவித்து வருகின்றனர். பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டும் உடனடியாக அனுமதி தரும் சீன அரசு, இந்திய விமானத்திற்கு மட்டும் திட்டமிட்டு காலம் தாழ்த்தி வருவது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.  

Related Stories: