தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை அய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பருவ மழை கடந்த மாதம் முதல் வாரத்தில் முடிவடைந்த நிலையில், குளிர் காலம் நிலவி வருகிறது. இரவு நேரத்தில் குளிரும் பகல் நேரத்தில் கடும் வெயிலும் என மாறி மாறி காலநிலை இருந்து வருகிறது. அதே போலக் குமரி மாவட்டத்திலும் கடும் வெப்பம் நிலவி வந்தது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே வெப்பம் அங்கு ஒரு காட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேவேளையில், மேலும் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவி்த்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதுங. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 3 செ.மீ மழையும், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், நெல்லை மாவட்டம் ராதாபுரம், நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு செ.மீ மழையும் பதிவாகியுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: