அம்மா உணவகம் முன்பு தேங்கிய கழிவுநீர் அகற்றம்

திருவொற்றியூர்:   திருவொற்றியூர் மண்டலம் 3வது வார்டுக்குட்பட்ட எண்ணூர், நேதாஜி நகரில் அம்மா உணவகம் உள்ளது. இந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால், அம்மா உணவக கழிவுநீரை, கீழ்நிலை தொட்டியில் சேமித்து, பின்னர் கழிவுநீர் அகற்று லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.   இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், இந்த கழிவுநீர் தொட்டி நிரம்பியது. ஆனால், லாரி மூலம் இதை அகற்றாததால், தொட்டியில்  இருந்து கழிவுநீர் வெளியேறி அம்மா உணவகம் முன்பு தேங்கியது. இதனால், உணவகத்துக்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து ‘தினகரன்’ நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

  இதையடுத்து திருவொற்றியூர் மண்டல குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேதாஜி நகரில் உள்ள அம்மா உணவகத்திற்கு வந்து, கீழ்நிலை தொட்டியில் நிரம்பியிருந்த கழிவுநீரை லாரி மூலம் அப்புறப்படுத்தினர். பின்னர், வாசல் முழுவதும் தூய்மைப்படுத்தினர். மேலும் அம்மா உணவகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த தனியார் லாரிகளுக்கு அபராதம் விதித்து அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டனர்.

Related Stories: