ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்க மாஜி அதிமுக எம்.பி.க்கு தடை

கோவை:  ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு  மாலை அணிவிக்க மாஜி அதிமுக எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யுமான கே.சி. பழனிசாமிக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.  அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமி அக்கட்சியின் பெயரில் சமூக வலைத்தளத்தை தவறாக பயன்படுத்துவதாக அவர் மீது கந்தவேல் என்பவர் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கே.சி. பழனிசாமியை கடந்த மாதம் 25ம் தேதி கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் கடந்த 13ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.  இந்நிலையில், வருகிற 24ம் தேதி (திங்கட்கிழமை) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவிக்க போலீசில் கே.சி. பழனிசாமி அனுமதி கேட்டிருந்தார்.

ஆனால் சிலைகளுக்கு மாலை அணிவிக்க கே.சி.  பழனிசாமிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதற்கான உத்தரவு தகவலை துணை  போலீஸ் கமிஷனர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.  கே.சி. பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் சிலைக்கு மாலை அணிவிக்க அவர் வந்தால் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் கருதவதாக தெரிகிறது. எனவேதான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: