கீழடி அருகே கொந்தகையில் அகழாய்வு தொடக்கம்

திருப்புவனம்: கீழடியை தொடர்ந்து கொந்தகை ஈமக்காட்டில் அகழாய்வுக்கான பணிகள் தொடங்கியுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி நேற்று முன்தினம் துவங்கியது. கீழடி மட்டுமின்றி அதை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடக்க உள்ளது. கொந்தகையில் பழமையான ஈமக்காட்டில் அகழாய்வு பணி நடைபெற உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் நேற்றுத் துவங்கின. இங்குள்ள ஈமக்காடு, கொந்தகை கால்நடை மருத்துவமனைக்கு முன்பாக சாலை ஓரத்தில் அமைந்துள்ளது.

இங்கு தமிழக தொல்லியல் துறையினர் அகழாய்வு மேற்கொள்ள குறியீடு செய்துள்ளனர். ஈமக்காட்டில் உள்ள புதர்களில் ஏராளமான அடையாள சின்னங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று பழங்கால ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த இடத்தில் முழுமையாக அகழாய்வு செய்யும்போது தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தும்விதமாக பல்வேறு பொருட்கள் கிடைக்கலாம் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு தமிழக தொல்லியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வு.

கீழடி என்பது மொத்த இந்திய வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லை உருவாக்கிய நகரம். கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம் தொழிற்கூடமா, இல்லை மக்களுடைய வாழ்விடமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதற்காக மிகப்பெரிய ஆய்வை முன்னெடுக்க வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக தமிழக அரசு 3வது ஆண்டாக ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் இன்னும் முக்கியமான பொருட்கள் கிடைக்கும் என நம்புகிறேன். கீழடி மட்டுமல்லாது அகரம், கொந்தகை, மணலூர் என இவை அனைத்தையும் பாதுகாப்பு மண்டல பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும். கொந்தகை மக்களை புதைத்த இடமாக இருந்துள்ளதா என்பது கிடைக்கப்பெற்ற எலும்புகளை மரபணு சோதனைக்கு உட்படுத்தினால் தெரியும்’’ என தெரிவித்தார்.

Related Stories: