உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: தேர்தல் ஆணைய அப்பீல் மனுவை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல்: உச்ச நீதிமன்றத்தில் மனு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிக்கு தற்போது மொத்தம் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.  இந்நிலையில், திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் நேற்று உச்ச நீதிமன்றத்தில் இணைப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: உள்ளாட்சி தேர்தலின்போது அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட விதிகளின்படி நடக்கிறதா என்பதை கண்காணிக்கும் விதமாகத்தான் சி.சி.டி.வி கேமரா பொருத்தி அதன் நிகழ்வுகள் அனைத்தையும் பதிவு செய்து தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அது ஏற்கத்தக்க ஒன்றாகும்.இந்த உத்தரவை எதிர்த்து, அவசரமாக மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும்.இதையடுத்து மேற்கண்ட இரண்டு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: