வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வணிக வரித்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட வணிக வரித்துறையில் அதிகாரியாக இருந்தவர் எம்.கே.மனோகரன். இவர் கடந்த 1.1.2004 முதல் 15.9.2009 வரையிலான காலகட்டத்தில் பணியில் இருந்தபோது பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளார்.

மேலும், அந்த சொத்துகள் அவரது வருமானத்துக்கு அதிகமாக வாங்கியதாக புகார் எழுந்தது. அதன்படி சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் அவர் 46 லட்சத்துக்கும் மேல் முறைகேடாக சொத்து சேர்த்ததை உறுதி செய்தனர். இதனைதொடர்ந்து, கடந்த 2011ம் ஆண்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓம்பிரகாஷ் முன்பு நடந்து வந்தது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் அரசு வக்கீல் பூர்ணிமாதேவி ஆஜராகி மனோகரன் தரப்பில் குற்றங்களை வாதிட்டார். வழக்கில் குற்றச்சாட்டு பதிவு, சாட்சி விசாரணைகள் என அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், இந்த வழக்கு விசாரணையில் மனோகரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது, என்று கூறி தீர்ப்பு வழங்கினார்.

Related Stories: