குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் நடந்தது கலெக்டர் அலுவலகங்கள் முன் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

* மதுரையில் போலீசாருடன் தள்ளுமுள்ளு

* முதியவர் தீக்குளிக்க முயற்சி
Advertising
Advertising

சென்னை: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் நேற்று முஸ்லிம்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முதியவர் தீக்குளிக்க முயன்றார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மதுரை மகபூப்பாளையத்தில் கடந்த 14ம் தேதி முதல் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டம், சென்னை தடியடி சம்பவத்தை கண்டித்து, மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் சுமார் 3 ஆயிரம் பேர் திரண்டனர். மதுரை மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் இருந்து ஊர்வலமாக சென்றவர்களை, மாநகராட்சி நீச்சல்குளம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மகாத்மா காந்தி நகரை சேர்ந்த சுல்தான்(80), திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புறநகர் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் முகமது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 7 ஆயிரம் பேரும், ராமநாதபுரத்தில் ஆயிரம் பேரும், தேனியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும்,  திண்டுக்கல்லில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், சிவகங்கையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். நெல்லை: நெல்லையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கானோர் நேற்று திரண்டு வந்தனர். பின்னர் மாவட்ட அறிவியல் மையம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்றதால் அறிவியல் மையம் முதல் கொக்கிரகுளம் சாலை வரை கூட்டம் காணப்பட்டது.

தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் குழந்தைகள் தேசிய கொடியினை கைகளில் ஏந்தி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். தூத்துக்குடி எப்சிஐ குடோன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 2 ஆயிரம் பெண்கள் உட்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். சுமார் 650 அடி நீளமுள்ள தேசிய கொடியை தங்களது தலைக்குமேல் பிடித்திருந்தனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.   ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு கோஷங்கள் எழுப்பினர். திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை: கோவையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ஈரோட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பேரணியாக   வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூரில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி மற்றும் ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தை தடையை மீறி நடத்த முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தி 2,500 பேரை கைது செய்தனர். பிற்பகலில் விடுவிக்கப்பட்டனர். நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த முற்றுகை போராட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி: திருச்சியில் 1,000 பேரும், திருவாரூரில் 1000 பேரும், தஞ்சையில் 3 ஆயிரம் பேரும் போராட்டம் நடத்தினர். நாகையில் 3,000 பேர நாகூர் சாலையில் செட்டிப்பிரிவு ரோட்டில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர், பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி, போராட்டம் நடந்தது.

Related Stories: