மல்லாங்கிணர் ரோட்டில் தரமாக அமைக்காத ரயில்வே தரைப்பாலம்: விவசாயிகள் கடும் அவதி

விருதுநகர்: ரயில்வே தரைப்பாலம் தரமாக அமைக்காதால் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ள விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். விருதுநகர்-மானாமதுரை ரயில்வே தடத்தில் மல்லாங்கிணர் ரோட்டில் வில்லிபத்திரி கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து சின்ன வள்ளிகுளம் வரை 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மானாவாரி விவசாய விளைநிலங்கள் உள்ளன. வில்லிபத்திரி, சின்னவள்ளிகுளம் கிராம விவசாயிகளுக்கு சொந்தமான இந்நிலங்களில் பருத்தி, மக்காச்சோளம், துவரை, பாசிப்பயறு, கம்பு, சோளம், மல்லி விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் மானாமதுரை ரயில்வே தடத்தின் வழியாக சென்று நிலங்களில் விவசாயம் செய்து, விளைபொருட்களை மல்லாங்கிணர் ரோடு வழியாக எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்தனர்.

ரயில்வே துறை ஆளில்லா ரயில்வே கேட்டுகளை மூடி தரைப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தடத்தில் இருந்த வழித்தடத்தை மூடி தரைப்பாலம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கினர். ஆனால் பாலம் அமைத்ததுடன் அப்படியே போட்டு சென்றுள்ளனர். தரைப்பாலத்தில் சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை. இந்த பாலத்தின் வழியாக மாட்டுவண்டிகள், டிராக்டர்கள் சென்று வரும் நிலையில், ரோடு அமைக்காததால் மழைக்காலங்களில் சென்று வர இயலாத நிலை உள்ளது. மேலும் விளைபொருட்களை கொண்டு வரமுடியாத அளவிற்கு உயரம் குறைவாக கட்டி உள்ளனர்.

தரைப்பாலத்தின் அடியில் வண்டிகள் சென்று வரும் வகையில் சாலை அமைக்க வேண்டும். விளைபொருட்களை கொண்டுவரும் வகையில் தரைப்பாலத்தின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். சமூக ஆர்வலர் கருப்பசாமி கூறுகையில், 2 ஆயிரம் ஏக்கரிலான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதையை மூடி தரைப்பாலம் பணிகளும் அறைகுறையாக கட்டி, சாலை அமைக்கவில்லை, உயரம் குறைவாக இருப்பதால் விளைபொருட்களை விவசாயிகள் எடுத்து வரமுடியாமல் அவதிப்படுகின்றனர். விளைபொருட்களை நிலங்களில் இருந்து கொண்டு வரும் வகையில் மாற்று ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்து தரவேண்டும் என்றார்.

Related Stories: