பிரேசிலில் இருந்து கொகைன் கடத்திய தென்னாப்ரிக்க பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போதைப்பொருள் கடத்திய தென்னாப்ரிக்கா பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு 20.1.2017 அன்று பிரேசில் நாட்டில் இருந்து அபுதாபி வழியாக சென்னைக்கு பெண் ஒருவர் கொகைன் போதைப்பொருளை கடத்தி வருவதாக ரகசிய தகவல் வந்தது. அதன்படி, பெண் அதிகாரி தலைமையிலான குழுவினர் சென்னை விமான நிலையத்துக்கு விரைந்து சென்றனர்.21.1.2017 அன்று அதிகாலை விமானம் சென்னை விமானநிலையத்துக்கு வந்தது. அப்போது, அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகளின் உதவியுடன் உள்ளே சென்று, சோதனை மேற்கொண்டனர். அதில், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பெண் ஒருவர் இருந்துள்ளார். அவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அந்த பெண் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பிரின்சஸ் நட்டோம்பிபுத்தி மிசோமி என்பது தெரியவந்தது. பின்னர், அவரிடம் போதைப்பொருள் தொடர்பாக சோதனை நடத்தினர்.

Advertising
Advertising

அதில், அவரது வயிற்றில் பல கோடி மதிப்புள்ள கொகைன் போதைப்பொருளை 80 கேப்சூலாக விழுங்கி வந்தது தெரியவந்தது.பின்னர் மருத்துவர்களின் உதவியுடன் வயிற்றில் இருந்த போதைப்பொருளை வெளியே எடுத்தனர். இதனைதொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு, சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் செல்லத்துரை ஆஜராகி வாதிட்டார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ₹2 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என தீர்ப்பு வழங்கினார்.

Related Stories: