சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்

சென்னை: நாடு முழுவதும் சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 1 லட்சம் அபராத தொகைக்கு விலக்கு அளிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இதில் பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களுக்கு 10 லட்சமாக அபராத தொகையை உயர்த்தி நேற்று உத்தரவிட்டுள்ளது.  பொதுமக்கள் பட்டினியாக இருப்பதை தடுக்கும் வகையில் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சமத்துவ சமுதாய உணவுக்கூடம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக பஞ்சாப், நாகலாந்து, கர்நாடகா, உத்தரகாண்ட், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களும், அந்தமான் நிகோபர், ஜம்மு காஷ்மீர் போன்ற யூனியன் பிரதேசமும் சமுதாய உணவுக் கூடம் அமைப்பது தொடர்பான நிலை அறிக்கையை பிரமாண பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.

தமிழகம் உட்பட பல மாநிலங்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஓர் அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில், “வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, 24 மணி நேரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யும் மாநிலங்களுக்கு குறைந்தபட்சம் 1 லட்சமும், காலக்கெடுவை மீறும் மாநிலங்களுக்கு 5 லட்சமும் அபராத தொகையாக செலுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டது. இதையடுத்து அவசரமாக வழக்கு தொடர்பாக அன்றைய தினமே பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, குறைந்த பட்சமாக 1 லட்சத்தை அபராதமாக கட்டியது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்கள் தரப்பில் நீதிபதி முன்னிலையில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதில், “எங்களுக்கு வழங்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் தமிழக அரசு தரப்பிலும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், சமுதாய உணவுக்கூடங்கள் அமைக்கும் விவகாரத்தில் அபராத தொகை 1 லட்சம் வழங்கியதில் எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.   இதையடுத்து நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்கள் தரப்பிலும் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்கிறது. மேலும் நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை அலட்சியம் செய்து பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களுக்கு முன்பு வழங்கிய அபராத தொகையை மேலும் ஒரு மடங்கு உயர்த்தி 10 லட்சமாக நீதிமன்றத்தில் கட்ட வேண்டும்’’ என உத்தரவிட்டது. மேலும், வழக்கை ஏப்ரல் 8ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதில் டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா, கோவா, மணிப்பூர் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள்தான் கூடுதல் அபராத தொகையான 10 லட்சத்தை கட்ட உள்ளனர்.

Related Stories: