கடமலை-மயிலை ஒன்றியத்தில் மழையின்மையால் தேங்காய் மகசூல் குறைவு

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் போதிய மழை இல்லாமல், விளைச்சல் குறைவால் தேங்காய் வரத்தும் குறைந்துள்ளது. கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், அய்யனார்கோவில், பொன்நிலம், தேவராஜ் நகர், பாலூத்து, கொம்புகாரன் புலியூர் ஆகிய பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக போதிய மழையில்லாமல் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேங்காய் வரத்தும் குறைந்துள்ளது. இந்நிலையில் தேங்காய் ஓன்று ரூ.14 முதல் 15 வரை தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் இருந்து திருப்பூர், காங்கயம், திண்டுக்கல், மதுரை, டெல்லி, கல்கத்தா ஆகிய பகுதிகளுக்கு லாரிகள் மூலம் தேங்காய்கள் அனுப்புவது வழக்கம். தற்போது தேங்காய் வரத்து குறைவால் தினசரி 2 லாரிகள் மூலமாக தேங்காய் அனுப்பப்படுகிறது.

இதுகுறித்து கொம்புகாரன் புலியூர் முத்தையா விவசாயி கூறுகையில், ‘கடந்த ஆண்டு முதல் தற்போது வரை தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதனால், தென்னை விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். விவசாயிகள் நலன் காப்பதற்கு மானிய விலையில் தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்க வேண்டும். இதற்கு தேனி மாவட்ட தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மைறை அதிகாரிகள் உதவ வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்’ என்றார்.

Related Stories: