குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே சிக்னல் இல்லாத பிரதான சாலை

* போக்குவரத்து பாதிப்பு * வாகன ஓட்டிகள் அவதி

Advertising
Advertising

குன்றத்தூர்: குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர். குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. கேது பரிகார ஸ்தலமான நாகேஸ்வரர் கோயிலும் இங்கு அமைந்துள்ளதால் தினமும் சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் குன்றத்தூரில் இருந்து திருமுடிவாக்கம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிப்காட்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த கனரக வாகனங்கள் சரக்குகளை கையாள அதிக அளவில் வந்து செல்கின்றன. குன்றத்தூரை சுற்றிலும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளதால் மாணவர்களை பள்ளி, கல்லூரி பஸ்களில் குன்றத்தூர் பிரதான சாலை வழியாகவே அழைத்து சென்று வருகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை குறுகிய நிலையில் காணப்படுவதால் குன்றத்தூர் ஊரின் உள்ளே செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது. அதிலும் அலுவலக நேரமான காலை, மாலை வேளைகளில் சாலையில் பயணிப்பவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே நான்கு சாலை சந்திக்கும் பகுதியில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால், வாகன ஓட்டிகள் இஷ்டத்திற்கு சாலையின் குறுக்கே தாறுமாறாக வலம் வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பாதசாரிகள் சாலையை கடப்பதிலும் சிரமம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள சந்திப்பு மற்றும் குன்றத்தூர் தேரடி சந்திப்பு பகுதிகளில் இதுவரை போக்குவரத்து சிக்னல்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது. இதனால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட உயிர் காக்கும் வாகனங்களும் குறித்த நேரத்தில் குறித்த இடங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி ஷேர் ஆட்டோக்களும் தங்களது பங்கிற்கு, சாலையின் நடுவே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதாலும் குன்றத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே குன்றத்தூர் பகுதிகளில் போதிய சிக்னல்களை அமைத்து, வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் இல்லாத பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்’’ என்றனர்.

Related Stories: