குரூப் 1 தேர்வு விடைத்தாளில் அடித்தல் செய்த விவகாரம்: சரிபார்த்து பணி நியமனம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குரூப் 1 தேர்வு விடைத்தாளில் அடித்தல் செய்ததால் தகுதி இழந்தவரின் விடைத்தாளை சரிபார்த்து துணை கலெக்டர் பணிக்கு ேதர்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017ல் நடந்த குரூப் 1 தேர்வில் பாபு பிரசாத் என்பவர் தேர்வு எழுதினார். முதல்நிலை தேர்வில் வெற்றிபெற்ற அவர், மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றார். 2017 அக்டோபர் 13 முதல் 15ம் தேதி வரை நடந்த முதல்நிலை தேர்வை பெரம்பூரில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அவர் எழுதினார். அதில் 15ம் தேதி எழுதிய தேர்வில் சில விடைகளுக்கான பதிலை அடித்துவிட்டார்.  அப்போது, தேர்வில் கண்காணிப்பாளராக இருந்த அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை விடைத்தாளில் அடித்தல் செய்த இடத்தில் பாபு பிரசாத் கையெழுத்திடுமாறு கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பகுதியில் பாபு பிரசாத் கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளிவந்தன. அதில் துணை கலெக்டர் தேர்வுக்கான பட்டியலில் பாபு பிரசாத் பெயர் இல்லை. இதையடுத்து, தனது விடைத்தாளை ஆய்வு செய்யக்கோரியும், துணை கலெக்டர் பதவிக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரியும் அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஆர்.விடுதலை ஆஜராகி வாதிடும்போது, மனுதாரர் தான் எழுதிய பதிலை அடித்தல் செய்த இடத்தில் தேர்வு கண்காணிப்பாளர் வலியுறுத்தலினால்தான் கையெழுத்து போட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே, இரண்டு முறை தேர்வு எழுதி டிஎஸ்பி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர். அவரது குறிக்கோள் துணை கலெக்டர் என்பதால்தான் இந்த தேர்வில் கலந்துகொண்டிருக்கிறார். கையெழுத்திட்டது அவரது தவறல்ல. எனவே, அவரது விடைத்தாளை ஆய்வு செய்து அவரை துணை கலெக்டர் பதவிக்கு தேர்வு செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது, டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆஜரான நிறைமதி வாதிடும்போது, விடைத்தாளில் பெயர் எழுதுவதும், கையெழுத்திடுவதும் தகுதி இழப்பை ஏற்படுத்தும் என்று டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்பாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர் தவறு செய்துவிட்டு தேர்வு அறையின் கண்காணிப்பாளர் மீது பழிபோடுகிறார் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மனுதாரர் திறமையானவர். அவர் ஏற்கனவே இருமுறை குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர். அவரது நோக்கம் கலெக்டர் ஆவது. எனவேதான் இந்த தேர்வை எழுதியுள்ளார். எனவே, திறமையானவர்களுக்கு வாய்ப்பு பறிபோய்விடக்கூடாது.

இந்த தேர்வில் 3வது மெயின் தாளில் அவர் கையெழுத்திட்டதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து தமிழக அரசு ஆய்வு செய்து 2 வாரங்களுக்குள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். கூடுதலாக ஒரு துணை கலெக்டர் பதவியை உருவாக்க முடியுமா என்பது குறித்து டிஎன்பிஎஸ்சிக்கு அரசு தெரிவிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி மனுதாரரின் விடைத்தாளை ஆய்வு செய்து அதில் அவர் வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு வாய்மொழி தேர்வுக்கு அழைப்பு விடுத்து துணை கலெக்டர் பதவி வழங்க வேண்டும். இந்த நடைமுறையை 4 வாரங்களுக்குள் டிஎன்பிஎஸ்சி முடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

* கூடுதலாக ஒரு துணை கலெக்டர் பதவியை உருவாக்க முடியுமா என்பது குறித்து டிஎன்பிஎஸ்சிக்கு அரசு தெரிவிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி மனுதாரரின் விடைத்தாளை ஆய்வு செய்து அதில் அவர் வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு வாய்மொழி தேர்வுக்கு அழைப்பு விடுத்து துணை கலெக்டர் பதவி வழங்க வேண்டும்.

Related Stories: