வேய்ந்தான்குளம், பெரியகுளத்தில் நடைபாதை, வியூ பாயின்ட் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் இலந்தைகுளத்தில் படகு குழாம்

நெல்லை: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் இலந்தைகுளத்தில் தீம் பார்க் மற்றும் படகு குழாம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள், வேய்ந்தான்குளம் மற்றும் ஜவஹர்நகர் பெரியகுளத்தில் நடைபயிற்சி பாதை, வியூ பாயின்ட் இருக்கைகள், மின்விளக்கு போன்ற வசதிகளை செய்வது குறித்து நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் நிர்வாக இயக்குநர் பாஸ்கரன், நேற்று நெல்லை வந்தார். மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் மாநகர பகுதிகளில் நடைபெற்று வரும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் மற்றும் சமீபத்தில் சீரமைக்கப்பட்ட என்ஜிஓ காலனி பெரியகுளம், வேய்ந்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

இலந்தைகுளத்தில் படகு குழாம் மற்றும் தீம் பார்க் அமைப்பது, ஜவஹர்நகர் பெரியகுளம் மற்றும் வேய்ந்தான்குளத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான வசதி, மின்விளக்கு, இருக்கைகள் அமைப்பது தொடர்பான வாய்ப்புகள் குறித்தும் ஆய்வு செய்தார். பெரியகுளம், வேய்ந்தான்குளம், சந்திப்பு பஸ் நிலைய கட்டிடப்பணி, ராமையன்பட்டி குப்பை உர மையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் பார்வையிட்டார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பாளை. ஏ.ஆர்.லைன் சாலையில் உள்ள இலந்தைகுளத்தில் தீம்பார்க் அமைத்து படகு போக்குவரத்து தொடங்க மாநகராட்சி மேயராக ஏ.எல்.சுப்பிரமணியன் இருந்தபோது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இடத்தையும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பாஸ்கரன் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே இந்த இடத்தில் உரக்கிடங்கு அமைக்க மாநகராட்சி முடிவு செய்திருப்பதாக தகவல் பரவியதால் பாஜவினர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Related Stories: