போரூர் ஏரியில் குப்பை கழிவு: கொட்டுவோருக்கு அபராதம்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: போரூர் ஏரியில் குப்பை கொட்டுவோரை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கோடை காலத்தில் பயன்படும் போரூர் ஏரியின் ஒரு பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் குப்பை குவியலாக காட்சியளித்து வருகிறது. இது சம்பந்தமான செய்தி பத்திரிகைகளில் வெளியானதை தொடர்ந்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் ராமகிருஷ்ணன் மற்றும் சாய்பால் தாஸ் குப்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றமும், தேசிய பசுமை தீர்ப்பாயமும், மாநில அரசு உள்ளாட்சி துறை அதிகாரிகள் மூலம் நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிப்பதுடன், குப்பையை சேகரித்து அறிவியல் பூர்வமாக திடக்கழிவு மேலாண்மை செய்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இருந்தபோதிலும் நீர்நிலைகளில் குப்பை, கழிவுநீர் கலப்பது தடுக்கப்படாதது வருத்தம் அளிப்பதாக கருத்து தெரிவித்தனர். பின்னர், போரூர் ஏரியின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பு பொறியாளர், நீர்வள ஆதார அமைப்பு, பொதுப்பணி துறை, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோரை கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டனர். மேலும், போரூர் ஏரியை ஆய்வு செய்து, தற்போதைய நிலை என்ன, யார் குப்பை கொட்டுகிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த தண்டனையும் அபராதமும் விதிக்க வேண்டும். இதுகுறித்து எடுக்கப்பட்டுள்ள  நடவடிக்கை என்ன என்பதை ஒரு மாத காலத்திற்குள் விரிவான அறிக்கையாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் மார்ச் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories: