மக்கள் நலத்திட்டங்களை கடன் பெற்று செயல்படுத்துகிறது வட்டிக்கு அதிகம் செலவிடுவதால் தமிழக அரசு திவாலாகிவிடும்: பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களை கடன் பெற்று செயல்படுத்துவதால், வட்டி செலவு அதிகமாகி தமிழக அரசு திவாலாகிவிடும் என்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து, திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு பொறுப்புள்ள நிதி நிலைமை மேலாண்மை சட்டம் 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் 4 சதவீதம் வருமானம் குறைந்துள்ளது. திமுக ஆட்சியில் 14.34 சதவீதம் இருந்தது தற்போது 10.49 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு ரூ. 69 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 2.50 சதவீதம் முதலீடு செய்யப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் 2 சதவீதம் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வரும்போது ஒரு லட்சம் கோடியாக இருந்த மாநிலத்தின் வருமானம் 2011ம் ஆண்டு முடியும் போது 2.09 லட்சம் கோடியாக இருந்தது. அப்போது, மக்கள் நலத்திட்டம் மாநிலத்தின் நிதியை வைத்து செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது தமிழக அரசு முழுக்க முழுக்க கடனை பெற்று மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. கடன் பெற்ற வட்டிக்கு மட்டுமே கடந்த நிதியாண்டில் 27 ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு செலுத்தியுள்ளது. வட்டிக்கு அதிக பணத்தை செலவு செய்தால் வளர்ச்சி குறையும், மக்கள் பாதிக்கப்படுவார்கள். திமுக ஆட்சி முடியும் போது அதாவது 2011ம் ஆண்டு தமிழக அரசின் மொத்த கடன் 1.02 லட்சம் கோடியாகும். தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கான கடன் 14 ஆயிரம் ரூபாய், ஆனால் தற்போது 3.59 லட்சம் கோடி மொத்த கடன் இருப்பதால் தலைக்கு 45 ஆயிரம் ரூபாயாக கடன் சுமை அதிகரித்துள்ளது.

கடன் மற்றும் வட்டிக்கு அதிகம் செலவிட்டால் தமிழக அரசு திவாலாகி விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, தமிழகத்தில் உள்ள குழந்தைகளின் தலையில் கடன் சுமையை தமிழக அரசு ஏற்றி வருகிறது. தமிழகம் நிதி மேலாண்மையில் பீகார், உத்தரபிரதேச மாநிலத்தை விட பின் தங்கியுள்ளது. நிதி நிலைமையை மேம்படுத்த தனியாக பொருளாதார வல்லுனர்கள் குழுவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். பெட்ரோல், தங்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மத்திய அரசின் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து விட்டால் மாநிலத்தின் உரிமை பறிபோய்விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: