'சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாமல் மேயர் பதவியை பிடிக்க தான் ஆர்வம் காட்டுகின்றனர்' : அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை : சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாமல் மேயர் பதவியை பிடிக்க  தான் ஆர்வம் காட்டுவதாக அரசியல் கட்சிகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளாக சொத்து வரியை உயர்த்தாமல் தூங்கிக் கொண்டிருப்பதா என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சொத்து வரியை வசூலிக்க விதிகளை வகுக்க மாநகராட்சிகளுக்கு உத்தரவிடக் கோரி விபிஆர் மேனன் எனபவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சொத்து வரி வசூலில் முறைகேடுகள்

சென்னை மாநகராட்சியில், சொத்து வரி வசூலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், குடியிருப்புக்களுக்கு அதிக வரியும், வணிக கட்டிடங்களுக்குகுறைந்த வரியும் வசூலிப்பதாகவும் கூறி, வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஒரே மாதிரியாக சொத்து வரி வசூல் விதிகளை வகுக்கும்படி மாநகராட்சிக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, கடந்த 2018ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடிவெடுத்தது ஏன்? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2018ம் ஆண்டு உயர்த்தப்பட்ட சொத்துவரியை அமல்படுத்தாமல் நிறுத்திவைக்க முடிவெடுத்தது ஏன் என்றும்  கடந்த 20 ஆண்டுகளாக சொத்து வரியை உயர்த்தாமல் அரசு தூங்கிக் கொண்டியிருக்கிறதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாதவர்கள் மேயர் பதவியை பிடிப்பது என்பதில் மட்டுமே  அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் 20 ஆண்டுகளில் 4 முறை சொத்து வரியை உயர்த்தி இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் வரியை உயர்த்தாததால் வெளியூர்காரர்கள் சென்னையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் அப்போது குறிப்பிட்டனர். எனவே, இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் வரும் 18ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: