ஜக்காம்பேட்டை சர்வீஸ் சாலையிலிருந்து திண்டிவனம் நீதிமன்றம் வரை மேம்பாலம்: தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு

திண்டிவனம்: ஜக்காம்பேட்டை சர்வீஸ் சாலையில் இருந்து திண்டிவனம் நீதிமன்றம் வரை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் அளவீடு செய்யும் பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேற்ககொண்டனர். திண்டிவனம்  அடுத்த ஜக்காம்பேட்டையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு  வரும் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் தேசிய  நெடுஞ்சாலையில் எதிர்திசையில் செல்லும் அவல உள்ளது. இப்பிரச்னையை தீர்க்க கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் சட்டத்துறை  அமைச்சர் சண்முகத்திடம் கோரிக்கை மனு  அளித்தனர். இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை சம்பந்தப்பட்ட  நீதிமன்றம் அமைந்துள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்து சர்வீஸ் சாலையில்  இருந்து நீதிமன்றத்திற்கு செல்ல புதிய சாலை ஏற்படுத்துவதற்கான பணிகளை  துரிதப்படுத்தினார்.

அதன்படி நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல நீதிமன்றத்தை  ஒட்டியுள்ள ஏரிக்கரை மேல் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.  இருப்பினும் அதில் சில சிக்கல்கள் எழவே தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம்,  தற்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நீதிமன்ற வளாக  நுழைவு வாயிலில் இருந்து ஜக்காம்பேட்டை சர்வீஸ் சாலை வரை மேம்பாலம் அமைக்க  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நீதிமன்ற  வளாகத்தை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் இடம் அளவீடு செய்யும் பணியை துவக்கினர். இதனை தொடர்ந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அப்பகுதியில் மேம்பால பணி  துவங்கவுள்ளது. பணிகள் துவங்கிய பின்னர் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்குள்  அப்பகுதியில் மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: