சார்பதிவாளர்கள் புரோக்கர்களுடன் கைகோர்த்தால் கடும் நடவடிக்கை: ஐஜி அலுவலகம் எச்சரிக்கை

சென்னை: சார்பதிவாளர்கள் இடைதரகர்களுடன் கைகோர்த்து செயல்படுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை ஐஜி அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் மற்றும் திருமண பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு அலுவலகங்களில் தினமும் குறைந்தபட்டசம் 25 முதல் 150 ஆவணங்கள் வரை பதிவு செய்யப்படுகிறது. இதனால், இந்த அலுவலகங்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அதுவும் முகூர்த்த நாட்களில் பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

இந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் சமீபகாலமாக பதிவுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் லஞ்சம் கொடுத்தால் தான் பத்திரபதிவு செய்யப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு பதிவின் போதும், அந்த நிலங்கள் மற்றும் கட்டிடங்களின் மதிப்புக்கு ஏற்றாற்போல் இடைதரகர்கள் மூலம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. உதாரணமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்து என்றால் ரூ.25 ஆயிரம் வரை லஞ்சம் தர வேண்டும். அப்போது தான் பத்திரப்பதிவு செய்து உடனடியாக திருப்பி தரப்படுகிறது. அதே நேரத்தில் பத்திரப்பதிவுக்கு பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பித்து வந்தால், அவர்களிடம் பல்வேறு காரணங்களை கூறி திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது.

இதனால், பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு வரும் போதும், பதிவு செய்த ஆவணத்தை திரும்ப பெறவும் பொதுமக்கள் நடையாய் நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு, சார்பதிவாளர் அலுவலகங்களின் வளாகத்தில் உள்ள இடைதரகர்கள் பெரும் இடையூறாக இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பதிவுத்துறை ஐஜி அலுவலகம் சார்பில் சார்பதிவாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்ப கூடாது. சார்பதிவாளர்கள் இடைதரகர்களுடன் கை கோர்க்க கூடாது. இது தொடர்பாக சார்பதிவாளர்கள் மீது புகார் வரும் பட்சத்தில், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சார்பதிவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: