இளைஞரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியை சிகிச்சை பலனின்றி மரணம்: முதல்வர் உத்தவ் தாக்கரே இரங்கல்

நாக்பூர்: இளைஞர் ஒருவரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் தரோடா என்ற ஊரைச் சேர்ந்தவர் அங்கிதா பிசுடே (25). இவர் இதே மாவட்டத்தில் ஹிங்கன்காட் என்ற இடத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவரும் விகேஷ் நாக்ராலே (27) என்ற இளைஞரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நண்பர்களாக இருந்தனர். விகேஷின் போக்கு பிடிக்காமல் அவருடனான நட்பை அங்கிதா துண்டித்துக் கொண்டார். அப்போதிருந்தே அங்கிதாவை விகேஷ் பின்தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

கடந்த 3ம் தேதியன்று அங்கிதா வழக்கம்போல கல்லூரிக்கு சென்றார். ஹிங்கன்காட்டில் அவர் பஸ்சில் இருந்து கீழே இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து வந்த விகேஷ் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை அங்கிதா மீது வீசி தீ வைத்தார். பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தில் அங்கிதாவுக்கு 35 முதல் 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. நாக்பூரில் உள்ள ஆரஞ்ச் சிட்டி மருத்துவமனையில் அங்கிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 8 நாட்களாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அங்கிதா சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 6.55 மணிக்கு மரணமடைந்தார். அங்கிதாவின் மறைவுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்றும் அங்கிதாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நேற்று அறிவித்தார்.

Related Stories: