பழைய மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அழிப்பது தொடர்பான கொள்கை: மத்திய அமைச்சரவையில் விரைவில் ஒப்புதல்?...கலக்கத்தில் வாகன ஓட்டிகள்

டெல்லி: பழைய மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அழிப்பது தொடர்பான கொள்கை விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் தண்ணீர், காற்று, சுற்றுச்சூழல்  எல்லாமே மாசு அடைந்து வருகின்றன. கூடுதலாக ஒலி மாசுவும், மனிதர்களைப் பாதிக்கின்றது. தலைநகர் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வாகனங்களில் வெளிவரும் புகையின் காரணமாக காற்று மாசு ஏற்படுகிறது. இதற்காக  குறிப்பிட்ட வகை வாகனங்கள் நகரங்களுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தியாவில் கார் மற்றும் பைக்குகளை அதை வாங்கிய தேதியில் இருந்து அதிகபட்சமாக 15 ஆண்டுகள் தான் பயன்படுத்த முடியும். அதன்பிறகு சம்மந்தப்பட்ட வாகனம் நல்ல நிலையில் இருந்தால் மேலும் 5 ஆண்டுகள்  பயன்படுத்த ஆர்.டி.ஓ அதிகாரி சான்றிதழ் அளித்து வரும் நடைமுறை தற்போது உள்ளது. இதற்கிடையே, தற்போது பி.எஸ்.6 என்ஜின் கொண்ட வாகனங்கள் அறிமுகம் ஆகத் தொடங்கியிருப்பதால் 15 ஆண்டுகளுக்கு பிறகு பி.எஸ்.4 அல்லது  அதற்கு குறைவான வெர்ஷன் கொண்ட என்ஜின் உடைய வாகனங்களை மறுபதிவு செய்து ஓட்ட அனுமதி வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பழைய வாகனங்களை அழிக்கும் மையங்களை அமைத்து செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் தொடர்பான வரைவுக் கொள்கைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்து, மத்திய அமைச்சரவைச்  செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. பதிவு எண்களை புதுப்பிக்காத வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களையும் அழித்தல் தொடர்பான பரிந்துரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. வாகன அழிப்பு மையம்,  அரசு-உற்பத்தியாளர்-உரிமையாளர் ஆகியோரின் பொறுப்புகள் குறித்த வழிகாட்டுதல்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் நீண்டகாலத் திட்டமான இந்த கொள்கை ஒரு வழியாக இறுதி செய்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில்  அதற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: