மேற்கு வங்க சட்டப்பேரவையில் அரசு எழுதி கொடுத்ததை சமத்தாக படித்த கவர்னர்: மம்தாவுடன் சமரசம்

கொல்கத்தா: மேற்கு வங்க அரசு எழுதி கொடுத்த உரையை சட்டப்பேரவையில் கவர்னர் ஜெகதீப் தன்கார் நேற்று மாற்றாமல் வாசித்தார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஜெகதீப் தன்்காருக்கும் கடும் மோதல் நிலவி வந்தது. கவர்னரை எல்லா வகையிலும் மம்தா மூக்குடைத்து வந்தார். இதனால், மாநில நிர்வாகத்தில் பரபரப்பு நிலவி வந்தது.  இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதை தன்கார் தொடக்க உரையாற்றி தொடங்கி வைத்தார்.

 முன்னதாக கடந்த புதன்கிழமை தன்கார் அளித்த பேட்டியில், ‘பட்ஜெட் தொடர் உரையை அப்படியே வாசிக்க மாட்டேன். அவற்றில் திருத்தம் செய்வேன். இதன் மூலம், புதிய வரலாற்றை உருவாக்குவேன் ,’ என்று தெரிவித்தார். இதற்கு மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால், சட்டப்பேரவையில் நேற்று உரையாற்றிய தன்கார், மம்தா அரசு எழுதி கொடுத்த கொள்கை முடிவுகள் அடங்கிய உரையை அப்படியே வாசித்தார். அவர் பேசுகையில், ‘‘தற்போது நமது நாடு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. தேசிய குடிமக்கள் பதிவை பரிந்துரை செய்தபோது பல உயிர் பலியானதற்கு எனது கவலையை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார். பின்னர், முதல்வர் மம்தா பானர்ஜியையும், சபாநாயகர் பீமன் பந்த்யோப்பாத்யாவையும் சபாநாயகர் அறையில் கவர்னர் சந்தித்து பேசினார். முன்னதாக, பேரவைக்கு வந்த அவரை மம்தா உள்ளிட்ட தலைவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Related Stories: