பிரதமர் பதவியில் இருப்பவர்களுக்கு தனி குணாதிசியம் மற்றும் பண்பு உண்டு..ஆனால் நமது பிரதமருக்கு இவை எதுவும் இல்லை: ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: பிரதமர் பதவியில் இருப்பவர்களுக்கு தனி குணாதிசியம் மற்றும் பண்பு உள்ளது. ஆனால், நமது பிரதமருக்கு இவை எதுவும் இல்லை என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவையில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது, டெல்லி பிரச்சாரத்தின்போது, வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் பிரதமர் மோடியை கம்பால் அடிப்பார்கள் என்று, ராகுல் காந்தி பேசியிருந்ததை மறைமுகமாக சாடிய பிரதமர், முன்கூட்டியே கூறியதற்கு நன்றி. நான் நன்கு சூரிய நமஸ்காரம் செய்து தயாராகிவிடுவேன், எனத் தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எழுந்து பேச முற்பட்டபோது பாஜக எம்பி.க்கள் குரல் கொடுத்ததால் அவர் அமர்ந்துவிட்டார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி கூறிய வார்த்தையை கண்டிப்பதாக மக்களவையில் இன்று, அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசினார். இதை காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்த்து கோஷமிட்டனர். மாணிக்கம் தாக்கூர் மற்றும் ஹர்ஷவர்த்தன் இடையே மோதல் சூழல் உருவானது. இந்த நிலையில்தான், அவை நடவடிக்கை பாதித்ததால், நாள் முழுக்க மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஒரு பிரதமருக்கு சிறப்பு அந்தஸ்து உண்டு. பிரதமர் பதவியில் இருப்பவர்களுக்கு தனி குணாதிசியம் மற்றும் பண்பு உள்ளது. ஆனால் நமது பிரதமருக்கு இந்த விஷயங்கள் இல்லை. அவர் பிரதமரைப் போல நடந்து கொள்வதில்லை.

வயநாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லை என்ற பிரச்சினை பற்றி நான் சபையில் பேச விரும்பினேன். நான் பேசியிருந்தால், பாஜக அதை விரும்பியிருக்காது. பாராளுமன்றத்தில் பேச எங்களுக்கு அனுமதி இல்லை. மக்களவையில் பதிவான வீடியோவைப் பாருங்கள். மாணிக்கம் தாகூர் யாரையும் தாக்கவில்லை, ஆனால் அவர்தான் தாக்கப்பட்டார். இன்று நாடாளுமன்றத்தில் திட்டமிடப்பட்ட கலாட்டா நடத்தப்பட்டது. அரசிடம் கேள்வி கேட்பதைத் தடுக்க இந்த கலாட்டா வடிவமைக்கப்பட்டுள்ளது. வேலையின்மை நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து பிரதமருக்கு எந்த ஐடியாவும் இல்லை என்பதை இந்திய இளைஞர்கள் தெளிவாகக் காணலாம். மோடியை பாதுகாக்க, பாஜக நாடாளுமன்ற நேரத்தை சீர்குலைத்து, விவாதத்தைத் தடுக்கிறது, என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: