உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது ; அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. ஸ்ரீநகரில் ஆகஸ்ட் 5 முதல் கடந்த 6 மாதங்களாக 2 பேரும் வீட்டுக்காவலில் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவரை எந்த விசாரணையுமின்றி 2 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைத்திருக்க பொது பாதுகாப்பு சட்டம் வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்தது.

அணிவகுப்பு மற்றும் பேரணிகளை தடை செய்தல், இணையதள சேவை மற்றும் மொபைல் சேவைகளைத் தடை செய்தல் ஆகியவையும் இதில் அடங்கும். பாதுகாப்புக்காக ராணுவ வீரர்களும் அப்பகுதியில் அதிக அளவில் நிறுத்தியது மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான முக்கிய அரசியல் தலைவர்களையும் தடுப்புக் காவலில் வைத்தனர். முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோரும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 6 மாதங்கள் ஆகியும் இவர்கள் விடுவிக்கப்படாமல் உள்ளனர். வீட்டுக்காவலில் இருக்கும் உமர் அப்துல்லா தாடி வளர்த்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளார்.

உமர் அப்துல்லாவின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி இருப்பது இப்போது, அங்கு அமைதி திரும்பிவிட்ட நிலையில், கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுவிட்டன. வீட்டுக் காவலில் உள்ள அரசியல் தலைவா்களும் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இது தொடர்பாக மெகபூபா முப்தியின் மகள்,  மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். 9 வயது சிறுவர்கள் மீது கூட தேசத்துரோக வழக்கு பதிவு செய்யும் சர்வாதிகார அரசிடம் இருந்து, இத்தகைய நடவடிக்கைகளை எதிர்பார்த்தோம் என்று தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் கண்டனம்

தலைவர்களின் வீட்டுக்காவல் அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகள் இல்லாமல் ஒருவரை கைது செய்து வீட்டில் வைப்பது ஜனநாயகத்தில் அருவருக்க தக்க செயல் என்று ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நீதியற்ற சட்டங்கள் இயற்றும் போது மக்கள் அதனை அமைதியாக எதிர்ப்பதை தவிர வேறு என்ன வழியிருக்க முடியும் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டம் நடத்தினால் கலவரம் என்று கூறப்படும் பிரதமர் மோடி மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் ஆகியோரின் வரலாற்றை மறந்துவிட்டதாக ப..சிதம்பரம் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: