முதுமலை யானைகள் நலவாழ்வு முகாம் துவக்க விழாவில் பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற வைத்த அமைச்சர்: சர்ச்சையில் சிக்கினார் திண்டுக்கல் சீனிவாசன்

ஊட்டி: முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் ேநற்று துவங்கியது. முகாமை துவக்கி வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின சிறுவனை அழைத்து தனது ெசருப்பை கழற்ற வைத்தது பெரும் சர்ச்சையானது. கோயில் யானைகளுக்காக புத்துணவுர்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் உள்ள 2 குட்டி யானைகள் உட்பட 27 வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நேற்று துவங்கியது. முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துவக்கி வைத்தார். 48 நாட்கள் நடைபெறும் இம்முகாமில்  கரும்புகள் மற்றும் பழவகைகள், ராகி, பாசி பயறு, சவனபிராசம், அஸ்தசூரணம்,  புரோட்டின் பவுடர்கள், மினரல்ஸ், வைட்டமின் பவுடர்கள், மஞ்சள் தூள்,  வெல்லம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட உள்ளன. நாள்தோறும் யானை  ஒன்றுக்கு தலா 150 கிலோ பசுந்தீவனமும் தரப்பட உள்ளன.

முகாம் துவங்கியதால் அப்பகுதியில் யானை சவாரி ரத்து செய்யப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள்  வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள். முகாம் துவக்க விழாவின்போது, அங்குள்ள  விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ெசன்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இரு பழங்குடியின சிறுவர்களை ‘டேய் பசங்களா...இங்கே  வாங்கடா...’ என அழைத்து தனது செருப்பை கழற்ற சொன்னார். ஒரு சிறுவன் குனிந்து அவரது செருப்பை கழற்றினான். இதனை கண்ட பத்திரிக்கையாளர்கள்  புகைப்படம் எடுக்க துவங்கினர். உடனே குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு அதை மறைத்தபடி நின்றர். அருகில் நின்ற மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, அமைச்சர் செருப்பை சிறுவன் கழற்றுவதை பார்த்தும் தடுக்காமல் வேடிக்கை பார்த்தபடி இருந்தார்.  முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருஷ்ணகுமார் கவுசல், வனத்துறை செயலாளர் சம்பு கல்லோலிகர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இந்த சம்பவம் அரங்கேறியது.

பின்னர் அந்த செருப்பை எடுத்துச் செல்லும்படி பாதுகாப்பு காவல் துறை  அதிகாரி சொல்லவே, அந்த சிறுவன் செருப்பை  எடுத்துச் சென்றார்.  இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அமைச்சரின் இந்த செயலுக்கு நீலகிரி மாவட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், நீலகிரி பண்டைய பழங்குடியினர் பேரவை, மக்கள் சட்ட மையம், பழங்குடியின சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு  தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிறுவன் புகார்:  தெப்பக்காடு அருகே உள்ள லைட் பாடி பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த அந்த சிறுவனும்,  பழங்குடியினரும் மசினகுடி காவல் நிலையத்திற்கு சென்று, புகார் மனு அளித்தனர். அதில், ‘தனது செருப்பை கழற்றி விடுமாறு கூறிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர்.

வருத்தம் தெரிவித்து பேட்டி:

ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பேட்டி: முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமுக்கு கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, அங்கிருந்த இரு சிறுவர்களை அழைத்து எனது செருப்பை கழற்ற சொன்னேன். எனது பேரன் போன்று இருந்ததால், அவர்களை அழைத்தேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அந்த சிறுவர்கள் மட்டுமின்றி வேறு யாருக்கேனும் இதில் வருத்தம் இருந்தால், அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

குண்டக்க மண்டக்க பதில்:

முகாமை துவக்கி வைத்தபின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முகாம் துவங்கியுள்ளது. மழை காலங்களில் வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் வருவதில்லை. மழை இல்லாத சமயங்களில்தான் உணவு, தண்ணீர் ேதடி வரக்கூடிய சூழல் உள்ளது. வன சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் மூலம் 2 ஆயிரம் பேர் வனத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை’ என்றார். அப்போது நிருபர்கள் குறுக்கிட்டு, ‘டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைேகடுபோல் வன சீருடை பணியாளர் தேர்வாணையத்திலும் முறைகேடு ஏதேனும் நடைபெற்றுள்ளதா? என கேட்டனர். உடனே அமைச்சர், ‘யானை என்ன டி.என்.பி.எஸ்.சி. பரீட்சையா எழுதுகிறது?’ என கிண்டலாக பதில் அளித்தார்.

Related Stories: