நடிகர் விஜய், பிகில் பட தயாரிப்பாளர், பைனான்சியர் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக ஐடி ரெய்டு

சென்னை: சென்னையை அடுத்த பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல் பிகில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் சமீபத்தில் பிகில் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் வெற்றி பெற்று இந்திய அளவில் வசூல் வேட்டையில் முதல் 10 இடங்களை பிடித்தது. ஏஜிஎஸ் நிறுவனம் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கில் நடிகர் விஜய்க்கு கொடுத்த ஊதியம் குறித்து கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்த கணக்கும் நடிகர் விஜய் கொடுத்த கணக்கும் முரண்பாடாக இருந்தாக கூறப்படுகிறது.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக நடிகர் விஜய்க்கு சொந்தமான பனையூர், சாலிகிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை நடந்த நேரத்தில், நடிகர் விஜய், ‘‘மாஸ்டர்’’ என்ற படத்தில் நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் நெய்வேலியில் அவரை சந்தித்து, அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். பனையூரில் உள்ள உங்கள் அறையில் சோதனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். விஜய்யை அதிகாரிகள் அழைத்துச் சென்றதால், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பின்னர் இரவு 9 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள வீட்டுக்கு அதிகாரிகள் விஜய்யை அழைத்து வந்தனர். விஜய்யின் தனி அறையில் அவர் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது. அதோடு அவரிடம் விடிய விடிய விசாரணையும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  அதேபோல், சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஏ.ஜி.எஸ். நிறுவனம், சினிமா தயாரிப்பு, திரைப்படம் விநியோகம், மற்றும் திரைப் படங்களுக்கு பைனான்ஸ்  மற்றும் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் திரையரங்குகளை நடத்தி வருகிறது. ஏ.ஜி.எஸ் குழுமத்திற்கு கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.  

நேற்று காலை 10 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்னை தி.நகரில் உள்ள ஏ.ஜி.எஸ் குழுமத்தின் உரிமையாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் வீடு, அவரது சகோதரர்கள் வீடுகள், திருமலை பிள்ளை தெருவில் உள்ள  ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் சென்னை வில்லிவாக்கம், நாவலூர், மதுரவாயல், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.ஜி.எஸ்  திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதேபோல், மதுரை காமராஜர் சாலை, தெப்பக்குளம் கனி தெருவை சேர்ந்தவர் அன்புச்செழியன். அதிமுக பிரமுகரான இவர் திரைப்பட பைனான்சியர் மற்றும் சென்னையில் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தாயார் வீடு மதுரை கீரைத்துறையில் உள்ளது. மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள அன்புச்செழியனின் திரைப்பட அலுவலகம், சென்னையில் உள்ள திரைப்படம் அலுவலகம், வீடுகளிளும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் பிகில் படத்தில் நடித்த விஜய், தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் ஆகியோர் வீடுகளில் 2-வது நாளாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories: