தியாகராஜ சுவாமி கோயிலில் பிரதிஷ்டை: புதிய கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம்... இன்று நடக்கிறது

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் கொடி மரத்திற்கான கும்பாபிஷேம் இன்று காலை நடைபெறுகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயில் சைவசமயத்தின் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் தலமாகவும் , சமய குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த விழா துவக்கத்திற்காக மஹாதுவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி கோயிலின் மூலவரான வன்மீக நாதர் சன்னதி எதிரே 2ம் பிரகாரத்தில் இருந்து வரும் கொடி மரம் கடந்த 1928ம் ஆண்டில் நிறுவப்பட்ட நிலையில் அதன் பின்னர் தற்போது 92 ஆண்டுகள் ஆகிவிட்டதால் சற்று சேதம் அடைந்திருந்தது. இதனையடுத்து இந்த கொடிமரத்தினை புதிதாக மாற்றுவதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக முடிவு செய்யப்பட்டதையடுத்து கடந்த மாதம் இந்த கொடி மரம் அகற்றும் பணி நடைபெற்றது. இந்நிலையில் இதற்கான புதிய கொடிமரம் கேரள மாநிலத்திலிருந்து ரூ. 9 லட்சம் மதிப்பில் தேக்கு மரத்தால் செய்யப்பட்டு கோயிலுக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டதையடுத்து 54 அடி நீளம் கொண்ட கொடி மரம் கடந்த மாதம் 20ம் தேதி சிவாச்சாரியார்கள் மூலம் பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் புதிய கொடிமரத்திற்கான கும்பாபிஷேகம் இன்று (5ம் தேதி) நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல் யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டு நேற்று மாலை வரையில் 3 கால பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் 4ம் கால பூஜைகள் துவங்கப்பட்டு 9 மணியளவில் மஹா பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்று அதன் பின்னர் கடம் புறப்பாடு நடைபெறும் நிலையில் பின்னர் 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் மூலம் புனித நீர் ஊற்றப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: