விண்ணை முட்டிய ஓம் நமசிவாய நாமம்; தஞ்சை பெரிய கோயிலில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு; கோபுரத்தில் தமிழில் ஒலித்த மந்திரம்

தஞ்சை: 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. பெரிய கோயில் கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. அதன்பின் மகாதீபம் காண்பிக்கப்பட்டது. ஓம் நமச்சிவாயம் விண்ணை முட்டும் அளவில் பக்தர்கள் முழங்க தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டது. குடமுழுக்கையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல 3 வழிகள் ஏற்படுத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலை கி.பி.1010ம் ஆண்டில் மன்னன் ராஜராஜசோழன் கட்டி முடித்து குடமுழுக்கு செய்தார். அதன்பிறகு தஞ்சையை ஆண்ட நாயக்கர், மராட்டிய மன்னர்களும் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு செய்தனர்.

கடைசியாக கடந்த 1997ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் யாகசாலை பூஜையில் தீ பிடித்து எரிந்ததில் பக்தர்கள் நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். அதன்பிறகு 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய குடமுழுக்கு பல்வேறு காரணங்களால் தடைபட்டது. இதையடுத்து, இந்திய தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறையினர் நடப்பாண்டில் நடத்த முடிவு செய்து திருப்பணிகளை கடந்த ஆண்டு தொடங்கினர். பெரியகோயில் ராஜகோபுரம், ராஜராஜசோழன் மற்றும் கேரளாந்தகன் நுழைவு வாயில்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.

மேலும், 12 அடி உயரம் மற்றும் நான்கரை அடி அகலம் கொண்ட செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட கோயில் கலசங்களுக்கு தங்கம் மெருகூட்டும் பணிகள் நடந்தன. இதேபோல் பழுதடைந்திருந்த கொடிமரமும் அகற்றப்பட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 2ம் தேதி பாலாலயம் நடைபெற்றது. பின்னர் உற்சவர் சிலைகள் நடராஜர் மண்டபத்தில் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. அதன்பின், யாகபூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 6ம் கால யாகபூஜை, ஜபம், ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, மாலை 7ம் கால யாகபூஜை, ஜபம், ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 8ம் கால யாகபூஜை, ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பர்ஸாஹூதி, காலை 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரிதி, 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கு நடைபெற்றது. 10 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் குடமுழுக்கு, மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெற உள்ளது.

பொதுமக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பக்தர்களின் வருகைக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தஞ்சையில் தற்காலிக பஸ் நிறுத்தம், வாகன நிறுத்தத்திற்காக 21 இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள 192 இடங்களில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: