டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு விடைத்தாள் வேனை பாதியில் நிறுத்திய அதிகாரி?

* மதுரை கோச்சிங் சென்டருக்கும் தொடர்பு

* டிரைவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் ‘திடுக்’

திருப்பரங்குன்றம்: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டில், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மையத்தில் இருந்து விடைத்தாள்களை ஏற்றிச் சென்ற தனியார் பார்சல் வேனை பாதியில் நிறுத்த சொல்லி உயரதிகாரி ஒருவர் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (31). கடந்த 4 ஆண்டுகளாக தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வு விடைத்தாள் உள்ளிட்டவைகளை, கீழக்கரையில் இருந்து சென்னைக்கு கொண்டு சென்றதாக தெரிகிறது. அப்போது வேனை உயரதிகாரி ஒருவரின் உத்தரவின்பேரில் கல்யாணசுந்தரம் பாதி வழியிலேயே  நிறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்த தகவலின்பேரில், சிபிசிஐடி போலீசார் ஜன. 29ம் தேதி கல்யாணசுந்தரத்தை சென்னைக்கு அழைத்து சென்று, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது வேனை நடுவழியில் நிறுத்த உத்தரவிட்ட அந்த உயரதிகாரியின் பெயரை, கல்யாணசுந்தரம் சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘மதுரையில் பிரபல தனியார் கோச்சிங் சென்டர் இயங்கி வருகிறது. இந்த கோச்சிங் சென்டரின் உரிமையாளர் அரசுத்துறை உயரதிகாரியாகவும் உள்ளார். இவருக்கு ஆளுங்கட்சியினருடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிகிறது. தனது கோச்சிங் சென்டரில் படிக்கும் தேர்வர்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு முன்னதாகவே வினாத்தாள்களை வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே, மதுரையில் இயங்கி வரும் அந்த கோச்சிங் சென்டரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்’’ என்றனர்.

Related Stories: