இலவச மின்சாரம் ரத்து? விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

கோபி: தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்தால்  தமிழகம் முழுவதும் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் கோபியில்  நடைபெற்றது. பின்னர் மாநிலத்தலைவர் சண்முகம் கூறியதாவது: மத்திய அரசு உதய் மின் திட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே மின்கட்டணம் என்ற திட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.  

அவ்வாறு உதய் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் 65 உயிர்களை இழந்து பெற்ற  விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து ஆகும் அபாயம் உள்ளது. அவ்வாறு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயரும். அதே நேரத்தில் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். இலவச மின்சாரம் ரத்து ஆகும் நிலை ஏற்பட்டால்  தமிழகம் முழுவதும் விவசாயிகளை திரட்டி போராடுவோம் என்றார்.

Related Stories: