மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் கச்சா எண்ணெய் குழாய் கசிவால் பயங்கர தீவிபத்து: அபாய சங்கு ஒலித்ததால் ஊழியர்கள் தப்பினர்

திருவெற்றியூர்: மணலியில் மத்திய அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு, 1,500க்கும் மேற்பட்ட அலுவலர் மற்றும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல் மூலம் சென்னை துறைமுகம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் மணலி சிபிசிஎல் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது.  அங்கு, கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நாப்தா போன்றவை தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 4.35 மணியளவில் இந்த நிறுவனத்தில் கச்சா எண்ணெயிலிருந்து நாப்தா பிரிப்பதற்கு செல்லக்கூடிய குழாய் வால்வில் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அபாய சங்கு ஒலித்ததால், அங்கிருந்த அலுவலர்களும், ஊழியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு ஓட்டம் பிடித்தனர்.

பின்னர், இதுபற்றி அந்நிறுவன வளாகத்தில் உள்ள தீயணைப்பு ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று, தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. பின்னர், தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், மாதவரம் போன்ற பகுதிகளில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடினர். தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் கடும் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு சென்றதால் யாருக்கும் எந்த காயமுமின்றி தப்பினர். இதுகுறித்து, மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் மணலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: