பிளஸ்2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் தேர்வு பயம் நீக்கி அதிக மதிப்பெண் பெற வழிகாட்டும் வெற்றி நமதே நிகழ்ச்சி: விஐடியில் 8ம் தேதி நடக்கிறது

வேலூர்: ,தினகரன், வேலூர் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து பிளஸ்2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் தேர்வு பயத்தை நீக்கி அதிக மதிப்பெண்கள் பெற வழிகாட்டும் வெற்றி நமதே நிகழ்ச்சி வரும் 8ம் தேதி விஐடியில் நடக்கிறது.

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு வரும் மார்ச் மாதம் தொடங்குகிறது. இத்தேர்வை எழுதும் அனைத்து மாணவர்களும் மனதில் ஒருவித அச்சத்துடனும், தேர்வு பதற்றத்துடனும் உள்ளனர்.

அதோடு எந்த கேள்வி வரும்?, அதை எப்படி படிக்க வேண்டும்?, விடைத்தாளில் எப்படி எழுதுவது?, குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து கேள்விகளையும் எப்படி எழுதி முடிப்பது? என்றெல்லாம் தெரியாமல் குழப்பமடைகின்றனர். இந்த குழப்பத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்கவும், தெளிவை ஏற்படுத்தி பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ளவும், தேர்வில் எளிதாக முழு மதிப்பெண்களை பெறவும் வேலூர் தினகரன் நாளிதழ் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து 6வது ஆண்டாக ‘வெற்றி நமதே நிகழ்ச்சி’யை வரும் 8ம் தேதி நடத்துகின்றன.

வேலூர் விஐடி பல்கலைக்கழகம் அண்ணா ஏசி அரங்கில் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை இந்த வெற்றி நமதே நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த கல்வி நிபுணர்கள் கலந்துக் கொண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு கையாள வேண்டிய யுக்திகள், விடைத்தாளில் அடித்தல், திருத்தல் இல்லாமல் எப்படி எழுதுவது?, புத்தகத்தில் கடினமான பகுதிகளை எளிதாக எப்படி படிப்பது?, தேர்வு நேரங்களில் ஏற்படும் பதற்றத்தை தவிர்க்கும் வழிகள்?, எப்படி எல்லாம் தேர்வு எழுத வேண்டும்?, எப்படி எழுதினால் கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும்? என்பது குறித்தும், பதற்றம் இல்லாமல் குழப்பம் இல்லாமல், உங்களை தெளிவுப்படுத்தி தேர்வை உற்சாகத்துடன் எதிர்கொள்ள வழிகாட்ட உள்ளனர்.

எனவே, அனைத்து மாணவர்களும் இந்த வெற்றி நமதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை வேலூர் தினகரன் நாளிதழ், விஐடி பல்கலைக்கழகம் இணைந்து செய்து வருகின்றன. வேலூர் தினகரன்- விஐடி இணைந்து நடத்தும் வெற்றி நமதே நிகழ்ச்சிக்கு ரேடியோ பார்ட்னராக வேலூர் சூரியன் எப்எம் 93.9 உள்ளது.

மாணவர்களுக்கு இலவச  பேருந்து, உணவு வசதி

தினகரன், விஐடி இணைந்து நடத்தும் வெற்றி நமதே நிகழ்ச்சி வேலூர் விஐடி வளாகத்தில் வரும் 8ம் தேதி நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் அனைத்து பகுதிகளில் இருந்தும் வேலூர் வந்து சேரும் மாணவர்கள் அங்கிருந்து நிகழ்ச்சி நடைபெறும் விஐடி வளாகத்துக்கு அழைத்துச்செல்ல இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அன்றைய தினம் காலை 7 மணி முதல் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், புதிய பஸ் நிலையம் மற்றும் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் இருந்தும் இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச மதிய உணவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை மீண்டும் அதே இடங்களில் கொண்டு விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: