தொற்றுநோய் ஏற்படும் அபாயம்; ஆகாயதாமரை செடிகள் படர்ந்துள்ளதால் வீணாகி வரும் பரிபூரணநத்தம் குளம்: நிதி ஒதுக்கியும் தூர்வாராதது ஏன்?

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே பரிபூரணநத்தம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் கிராம அடிப்படை வசதிகள் இன்னும் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறலாம். கிராமத்தின் சாலைகள் குண்டும், குழியுமாக பெயர்ந்து சாலையின் கற்கள் நடந்து செல்பவர்களின் கால்களை பதம் பார்க்காமல் விடுவது இல்லை. இதுபோல் கிராமத்தில் ஏராளான விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. இந்நிலையில் பரிபூரணநத்தம் கிராமத்தில் உள்ள தெருக்குளமானது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உள்ள ஊரின் நடுவில் உள்ள பெரிய குளமாக திகழ்ந்து வருகிறது. பொதுமக்கள் குளிப்பது, துணிதுவைத்தல், கால்நடைகள் பராமரிப்பு போன்ற பல்வேறு தேவைகளுக்கு பயன்பட்டு வந்த தெருக்குளம் இப்போது ஆகாயத்தாமரை மண்டிக்கிடக்கும் குளமாக மாறிப்போய்விட்டது.

இதனால் கிராமத்தில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதோடு குளத்திலிருந்து துர்நாற்றமும் வீச செய்வதாகவும், பலர் தங்கள் வீட்டு வடிகால் நீரை இந்தக்குளத்திலும் வடிய வைக்கும் நிலையே இருக்கிறது எனவும் வேதனையோடு தெரிவிக்கிறார்கள். பலமுறை குளத்தை தூர்வார நிதி ஒதுக்கியும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் பரிபூரணநத்தம் கிராமத்தின் பெரியகுளம் எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலையை அடையும். இதனால் கிராமத்தில் பொது சுகாதார வசதி பாதிப்படைந்து பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தனி கவனம் எடுத்து நிரந்தரமாக குளத்தை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: